மேல்நிலை பள்ளிகளின் ஆய்வகம், நுாலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும், தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தலாம் என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி வளாகங்களில் செயல்படும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள், மேல்நிலைப் பள்ளியின் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை. மேலும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியின் வகுப்பறை, விளையாட்டு மைதானம், ஆய்வகம் உள்ளிட்டவற்றையும் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை.
தொடக்கப் பள்ளிகளில், மூத்த ஆசிரியர்கள், அனுபவ அடிப்படையில், தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருப்பர்.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் கண்காணிப்பில் இல்லாததால், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், தங்கள் விருப்பத்துக்கேற்ப விடுமுறை எடுப்பது, வகுப்புகளை,'கட்'' அடிப்பது போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபடுவதாக, புகார்கள் எழுகின்றன.
இது குறித்து, பள்ளி கல்வித் துறை விசாரணை நடத்தி, தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கல்வி தரம் உயரும் வகையில், புதிய அரசாணையை பிறப்பித்துள்ளது.
பள்ளி கல்வித் துறை முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ள அரசாணை:
தொடக்கப் பள்ளிகளில், குறிப்பிட்ட பாடத்துக்கு ஆசிரியர்கள் இல்லாதபோது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்களை அனுப்பி, பாடம் நடத்தலாம்.
மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகம், விளையாட்டு மைதானம், (www.minnalseithi.in)ஆய்வகம், நுாலகம், 'ஸ்மார்ட் வகுப்பு ஆகியவற்றை, தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தலாம்.
மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உபகரணங்கள் வழியே, தொடக்க கல்வி மாணவர்களின் விளையாட்டு திறமையை மேம்படுத்தலாம்.
மேலும், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கற்றல் திறன், வருகை பதிவு, விடுப்பு வழங்குதல், நலத்திட்ட உதவி வழங்குதல் போன்றவற்றை, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.