108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கடந்த மாதம் சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந் தேதி முதல் நின்றகோலத்தில் அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.
அத்திவரதர் தரிசனம் நிறைவுபெறுவதையடுத்து நாளை (சனிக்கிழமை) சிலை கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுகிறது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. நாளை (ஆக.,17) காலை துவங்கி அத்திவரதருக்கு 6 கால பூஜைகள் ஆகம விதிப்படி நடைபெற உள்ளது.
அதன் பிறகு அத்திவரதரை மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்குள் கொண்டு செல்லும் பணிகள் நடைபெறும். நாளை மாலை அல்லது இரவு, அனந்தசரஸ் குளத்திற்குள் அத்திவரதர் கொண்டு செல்லப்படுவதால் நாளை பக்தர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது.
இந்நிலையில், காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
அத்திவரதர் தரிசனம் இன்று இரவு 9 மணியுடன் நிறைவு பெறுகிறது. இரவு 9 மணிக்கு கிழக்கு கோபுர வாசல் மூடப்பட்டு, உள்ளே இருப்பவர்கள் மட்டும் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.