Type Here to Get Search Results !

பிற மாவட்டங்களில் பணிபுரியும் வேலூர் தொகுதி மக்களுக்கு 5-ஆம் தேதி விடுமுறை


வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி, பிற மாவட்டங்களில் பணியாற்றும் வேலூர் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த மக்களுக்கு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 5) ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.


வேலூர் மக்களவைத் தேர்தல் வரும் திங்கள்கிழமை நடைபெற உள்ளதையொட்டி, இத்தொகுதிக்கு உள்பட்ட வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம் ஆகிய பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட அரசு, தனியார், பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, வாக்குப்பதிவு செய்ய வசதியாக அந்த ஊழியர்களுக்கு திங்கள்கிழமை ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அதேசமயம், பிற மாவட்டங்களில் பணியாற்றும் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்காளர்களுக்கு திங்கள்கிழமை பொது விடுமுறை அளிக்கப்படுவது தொடர்பாக தெளிவுபடுத்தப்படாமல் இருந்தது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.


இந்நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்துள்ள பிற மாவட்டங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் திங்கள்கிழமை ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் விளக்கம் அளித்துள்ளார்.


எனவே, வேலூர் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள், பிற மாவட்டங்களில் பணியாற்றினாலும் தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் திங்கள்கிழமை ஊதியத்துடன் கூடிய விடுமுறை பெற்று வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Top Post Ad

Below Post Ad