விஸ்வரூபம் படத்தில் வில்லனாக வந்த பிரபல் இந்தி நடிகர் ராகுல் போஸ், பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 2 வாழைப்பழம் மட்டுமே சாப்பிட்டதற்காக ரூ. 442 பில் கட்டியதை டுவிட்டரில் வெளியிட்டார். இதனையடுத்து ஓட்டலுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தது. பலரும் தாங்கள் எவ்வளவு கட்டினோம் என்பதை டுவிட்டரில் வெளியிட்டனர். வாழைப் பழத்திற்கு ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்பட்டது. விதிகளை மீறி ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்களில் ஒன்றான வாழைப்பழத்திற்கு வரி வசூலித்ததற்காக ஜேடபிள்யூ மேரியட் ஓட்டலுக்கு கலால் மற்றும் வரிவிதிப்பு துறை அதிகாரிகள் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்கு மும்பையிலிருந்து அதுபோன்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் உள்ள சொகுசு ஓட்டலில் 2 வேகவைத்த முட்டைக்கு ரூ. 1,700 பில் கொடுக்கப்பட்டது சமூக வலைதளங்களில் விமர்சனங்கள், கேலியுடன் டிரெண்ட் ஆகி வருகிறது. கார்திக் தார் என்ற டுவிட்டர் வாசி ஓட்டலில் கட்டிய பில்லை வெளியிட்டு ராகுல் போஸிடம் நாம் போராட வேண்டுமா? என்று கேள்வியை எழுப்பியுள்ளார். சிலர் விமர்சனங்களை பதிவு செய்தாலும், அங்குதான் அதிகமாக கட்டணம் உள்ளது என்று தெரிந்தும் அங்கு ஏன் செல்கிறீர்கள்? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்