உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் அரையிறுதிப் போட்டி மழையால் தடைபட்டுள்ளது. எஞ்சியுள்ள ஆட்டம் இன்று தொடரும் என நடுவர்கள் அறிவித்துள்ளனர்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முதலில் தகுதி பெறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்று களம் கண்டன. மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து மார்ட்டின் கப்திலும், நிக்கோலசும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர். இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அவர்கள் திணறினர். கப்தில், ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் இரண்டாவது விக்கெட்டுக்கு நிக்கோலசுடன் ஜோடி சேர்ந்தார். அவர்கள் இருவரும் நிதானமாக ரன்களைச் சேர்த்தனர்.
நிக்கோலஸ் 28 ரன்களில் ஆட்டமிழக்க, பிறகு அனுபவ வீரர் ராஸ் டெய்லர் களமிறங்கினார். அரைசதம் கண்ட வில்லியம்சன் 67 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த நீஷம் மற்றும் கிராண்ட்ஹோம் ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். 46 புள்ளி ஒரு ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டது.
மழை விட்டுவிட்டு பெய்து வந்ததால், ஆட்டத்தை தொடர முடியாத சூழல் உருவானது. இதனால் நியூசிலாந்தின் எஞ்சிய இன்னிங்ஸூடன் ஆட்டம் இன்று தொடரும் என நடுவர்கள் அறிவித்தனர். ஆட்டம் தடைபட்டபோது ராஸ் டெய்லர் 67 ரன்களுடனும், டாம் லாதம் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அவர்கள் இருவரும் இன்று தொடர்ந்து விளையாடுவார்கள்.
ஒருவேளை இன்றும் மழை பெய்யும்பட்சத்தில், லீக் சுற்றின் முடிவில் அதிக புள்ளிகளைப் பெற்ற அணி என்ற அடிப்படையில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தானாகவே முன்னேறிவிடும்.