Type Here to Get Search Results !

நடுவரின் தவறால் தோனி ரன் அவுட்? சர்ச்சைக்குள்ளான நியூசிலாந்து அணியின் ஃபீல்டிங்

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ள நிலையில், தோனி ரன் அவுட் ஆகும் போது எதிரணியின் பீல்டிங் வியூகம் கேள்வியை எழுப்பியுள்ளது.

உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணியை சந்தித்தது. நேற்று முன் தினம் நடந்த இந்தப்போட்டியில் மழை குறுக்கிட்டதால், மீதமுள்ள ஆட்டம் நேற்று நடந்தது.

இந்தியாவுக்கு 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ரோஹித், ராகுல், கோலி என முதல் 3 வீரர்களும் 1 ரன்களில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

ஜடேஜா, தோனி இறுதிகட்டத்தில் போராடியும் 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. தோனி ரன் அவுட் ஆனது விமர்சிக்கப்பட்டாலும், தொடக்க வீரர்கள் சொதப்பியதே மிகப்பெரிய தவறாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தோனி ரன் அவுட் செய்யப்பட்டபோது, வட்டத்திற்கு வெளியே 6 ஃபீல்டர்கள் இருந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

பவர் பிளேயின் போது 5 ஃபீல்டர்கள் மட்டுமே வட்டத்திற்கு வெளியே இருக்க வேண்டும் என்பது விதியாக இருக்கும் நிலையில், கள நடுவர்கள் இதனை கவனிக்கத் தவறியதாக கேள்வி எழுந்துள்ளது.

6 ஃபீல்டர்கள் வட்டத்திற்கு வெளியே நிற்கும் போதுதான் தோனி இரண்டாவது ரன் எடுக்க ஓடி ரன் அவுட் செய்யப்படுவார். நடுவர் இதனை முன்னரே கவனித்து நோ-பால் என்று எச்சரிக்கை செய்திருந்தால், அடுத்த பால் ஃப்ரீ ஹிட் என்பதால், தோனி இரண்டாவது ரன் எடுக்க ஓடியிருக்க மாட்டார் என்றும் பலர் விமர்சனம் செய்கின்றனர்.

நடுவர்கள் எச்சரிக்கை செய்திருந்தால் ஒருவேளை பந்தை த்ரோ செய்து ரன் அவுட் செய்த குப்தில் வேறு இடத்தில் பீல்டிங் செய்திருக்கலாம். தோனி அவுட் ஆகி இருக்க மாட்டார் என்றும் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

ஐசிசி இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பலர் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.


Top Post Ad

Below Post Ad