கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கிடுக்கிப்பிடி போடும்வகையில் புதிய வரியை விதிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. விரைவில், இது தொடர்பான சட்டவரைவு நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வகை நிறுவனங்களுக்கு நேரடி வரிவிதிப்பு முறை தொடர்பாகப் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதென மத்திய நிதித்துறை அமைச்சகம் கடந்த ஆண்டே முடிவுசெய்தது. இதன் ஒரு பகுதியாக, ’குறிப்பிடத்தக்க பொருளாதார இருப்பு’ எனும் கருத்துருவை கடந்த நிதிநிலை அறிக்கையிலேயே அறிவிக்கவும் செய்தது.
பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்கள், குறிப்பாக இணையம்சார் நிறுவனங்கள், (இந்திய) உள்நாட்டு அளவில் கணிசமான அளவில் வருவாயை ஈட்டுகின்றன. இணையதளம் மூலம் வாடிக்கையாளர்களிடம் விளம்பரம்செய்கின்றன. ஆனால், அந்த அளவுக்கேற்ப கட்டவேண்டிய வரியைவிடக் குறைவாகவே செலுத்துகின்றன என்று நீண்டகாலமாகப் புகார் உண்டு.
இங்கு மட்டுமல்ல, உலக அளவிலும் இது பெரிய சட்டரீதியான பிரச்னையாக மாறியுள்ளது. ஐரோப்பாவில் உள்நாட்டு அளவில் அதிக வருவாயையும் லாபத்தையும் ஈட்டும் பெரும் தகவல்நுட்ப நிறுவனங்களுக்கு உரிய வரியை விதிப்பது குறித்து அரசுகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியமானது டிஜிட்டல் நிறுவனங்களின் மூலநாட்டில் மேற்கொள்ளப்படும் வருவாயில் 3 சதவிகிதம் அளவுக்கு வரியை விதிக்க யோசித்துவருகிறது.
இந்தியாவில் கூகுள், ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் உள்நாட்டு அளவில் பணப்பரிவர்த்தனையை நடத்தினாலும், அதன் விவரம் முழுவதையும் வருவாயாகக் காட்டுவதில்லை என்றும் பரிவர்த்தனையின் ஒரு பகுதியை தரகுத் தொகையாகவே காட்டுகின்றன என்றும் இதனால் மீதமுள்ள தொகையானது தேசங்கடந்த சொத்தாக மாற்றப்படுகிறது என்றும் நிதித்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
பெங்களூரு வரிகள் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இதில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கூகுள் நிறுவனம் இடைக்காலத் தடையை வாங்கியுள்ளது. இந்த நிலையில்தான், வரிவிதிப்பில் புதிய மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது.