இங்கிலாந்து அணி முதன்முறையாக உலக கோப்பை வென்று சாதித்தது. பரபரப்பான பைனல் 'டை' ஆனது. பின், சூப்பர் ஓவரும் 'டை' ஆக, பவுண்டரி அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. போராடிய நியூசிலாந்து அணி அரிய வாய்ப்பை பரிதாபமாக இழந்தது.
இங்கிலாந்தில், 12வது ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. நேற்று, லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த பைனலில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதின. நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று காலை பெய்த மழையால் போட்டி துவங்குவதில் தாமதமானது. இரு அணிகளிலும் மாற்றம் செய்யப்படவில்லை. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
நிக்கோல்ஸ் அரைசதம்
நியூசிலாந்து அணிக்கு மார்டின் கப்டில் (19) சுமாரான துவக்கம் தந்தார். பின் இணைந்த நிக்கோல்ஸ், கேப்டன் வில்லியம்சன் ஜோடி நிதானமாக விளையாடியது. இரண்டாவது விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்த போது பிளங்கட் பந்தில் வில்லியம்சன் (30) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய நிக்கோல்ஸ் (55) அரைசதம் கடந்து கைகொடுத்தார். அடுத்து வந்த ராஸ் டெய்லர் (15), ஜேம்ஸ் நீஷம் (19), கோலின் டி கிராண்ட்ஹோம் (16) நிலைக்கவில்லை. டாம் லதாம் (47) ஓரளவு கைகொடுத்தார். மாட் ஹென்றி (4) ஏமாற்றினார்.
நியூசிலாந்து அணி 50 ஓவரில், 8 விக்கெட்டுக்கு, 241 ரன்கள் எடுத்தது. மிட்சல் சான்ட்னர் (5), டிரண்ட் பவுல்ட் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் வோக்ஸ், பிளங்கட் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
மார்கன் ஏமாற்றம்
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் (17), ஜோ ரூட் (7), கேப்டன் இயான் மார்கன் (9) ஏமாற்றினர். ஜானி பேர்ஸ்டோவ் (36) ஆறுதல் தந்தார். இங்கிலாந்து அணி, 86 ரன்னுக்கு, 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
பின் இணைந்த பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. பவுல்ட் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய பட்லர், அரைசதம் கடந்தார். மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த ஸ்டோக்ஸ், தன்பங்கிற்கு அரைசதமடித்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 110 ரன் சேர்த்த போது பெர்குசன் பந்தில் பட்லர் (59) 'பெவிலியன்' திரும்பினார். வோக்ஸ் (2), பிளங்கட் (10), ஆர்ச்சர் (0) சோபிக்கவில்லை.
திரில் 'டை'
கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்டது. பவுல்ட் வீசிய 50வது ஓவரின் முதலிரண்டு பந்தில் ரன் எடுக்கப்படவில்லை. மூன்றாவது பந்தை ஸ்டோக்ஸ் சிக்சருக்கு அனுப்பினார். நான்காவது பந்தில் 2வது ரன்னுக்கு ஓடிய போது கப்டில் எறிந்த பந்து ஸ்டோக்சின் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றது. இதனையடுத்து 6 ரன் வழங்கப்பட்டது. ஐந்தாவது பந்தில் 2வது ரன்னுக்கு ஓடிய அடில் ரஷித் (0) 'ரன் அவுட்' ஆனார். கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்ட நிலையில், 2வது ரன்னுக்கு ஓடிய மார்க் உட் (0) 'ரன்-அவுட்' ஆனார். இங்கிலாந்து அணி 50 ஓவரில், 241 ரன்களுக்கு 'ஆல்-அவுட்டாக' போட்டி 'டை' ஆனது. ஸ்டோக்ஸ் (84) அவுட்டாகாமல் இருந்தார். நியூசிலாந்து சார்பில் பெர்குசன், நீஷம் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
'சூப்பர் ஓவர்'
இதனையடுத்து 'சூப்பர் ஓவர்' முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு ஓவர் வழங்கப்பட்டது. நியூசிலாந்தின் பவுல்ட் வீசிய முதல் பந்தில் 3 ரன் எடுத்த ஸ்டோக்ஸ், 3வது பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார். மறுமுனையில் அசத்திய பட்லர், கடைசி 2 பந்தில் ஒரு பவுண்டரி உட்பட 6 ரன் எடுத்தார். இங்கிலாந்து அணி, ஒரு ஓவரில், 15 ரன் எடுத்தது.
பின், 16 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நியூசிலாந்தின் கப்டில், நீஷம் களமிறங்கினர். இங்கிலாந்தின் ஆர்ச்சர், முதல் பந்தை 'வைடாக' வீசினார். இதன் மாற்று பந்தில் 2 ரன் எடுத்த நீஷம், 2வது பந்தில் சிக்சர் அடித்தார். அடுத்த 3 பந்தில், 5 ரன் எடுத்தார் நீஷம். கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்ட நிலையில், 2வது ரன்னுக்கு ஓடிய கப்டில் 'ரன் அவுட்' ஆனர். இதனையடுத்து 'சூப்பர் ஓவர்' முறையும் 'டை'ஆனது. பின், அதிக பவுண்டரி அடித்த அணி அடிப்படையில் இங்கிலாந்து அணி (26 பவுண்டரி) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 17 பவுண்டரி மட்டும் அடித்த நியூசிலாந்து இரண்டாவது இடத்தை பெற்று ஆறுதல் தேடியது.