Type Here to Get Search Results !

இனி தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் ,வணிக நிறுவனங்கள் செயல்படும் -தமிழக அரசு அரசாணை





 






தமிழகத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளிக்கும் அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களை திறந்து வைப்பதற்கான நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசின், கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட மசோதா இறுதி செய்யப்பட்டது.

அதன்படி, அனைத்து சினிமா தியேட்டர்கள், ஓட்டல்கள், கடைகள், வங்கிகள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் வாரத்துக்கு 7 நாட்களிலும் 24 மணிநேரமும் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த மசோதாவை ஒவ்வொரு மாநிலமும் அப்படியே பின்பற்றலாம் அல்லது அந்தந்த மாநிலத்தின் நடைமுறை தேவைகளின்படி மாற்றிக்கொண்டு அமல்படுத்தலாம் என்று வழிவகை செய்யப்பட்டது.


இந்தியாவில் அந்த மசோதாவை அமல்படுத்திய மாநிலம் மராட்டிய மாநிலமாகும். 2018-ம் ஆண்டு முதல் அங்கு கடைகள், ஓட்டல்கள், உணவு விடுதிகள் ஆகியவை 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதிக்கப்படுகின்றன. தமிழகத்தில் 2017ம் ஆண்டு மார்ச் 22ம் தேதி வரை ஓராண்டுக்கு கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

சமீபத்தில், தமிழக அரசுக்கு, தொழிலாளர் ஆணையர் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், 'பெண் பணியாளர் பாதுகாப்பு உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்களை திறந்து வைப்பதற்கான அனுமதியை அரசு வழங்கலாம்' என்று கூறியிருந்தார்.

அக்கடிதத்தில் உள்ள பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைக்கலாம் என்பதற்கான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொழிலாளர் ஆணையரின் பரிந்துரைகளின் படி பெண் ஊழியர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.


Top Post Ad

Below Post Ad