சென்னை கோயம்பேடு பழச்சந்தையில் மாம்பழங்களை எத்திலின் வாயுமூலம் செயற்கையான முறையில் பழுக்க வைக்கும் முறையை வியாபாரிகள் பின்பற்றி வருகிறார்கள்.
இயற்கைக்கு மாறாக மாம்பழங்களை பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு கற்களை வியாபாரிகள் பயன்படுத்தி வந்தனர். இவ்வாறு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் உடலுக்கு கேடு என்பதால் மாநகராட்சி மற்றும் உணவுப் பாதுகாப்பு துறை இதற்கு தடை விதித்தது. இந்த ஆண்டு மாம்பழ சீசன் தொடங்கியதை அடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எத்திலின் வாயு கொண்டு மாம்பழங்களை பழுக்க வைக்கும் புதிய முறை குறித்து வியாபாரிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
சென்னை கோயம்பேடு பழச் சந்தையில் மாம்பழங்களை பழுக்க வைக்க சிறு பாக்கெட்டுகளாக இருக்கும் எத்திலீன் வாயுவை சோப்பு டப்பாக்களில் அடைத்து மாம்பழம் கூடைக்குள் வைக்கிறார்கள்.
இந்த நடைமுறையை பயன்படுத்தினால் மூன்று நாட்களுக்குள் மாம்பழம் பழுத்துவிடும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். நேரடியாக பழங்களில் வைக்காமல், காற்றில் பரவக்கூடியதால் உடலுக்கு கேடு இல்லை என்றும் இது மாவட்ட ஆட்சியர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை மூலம் அங்கீகரிக்கப்பட்டது என்பதால் வியாபாரிகள் இதனை பின்பற்றி வருகின்றனர்.
Source: puthiya Thalaimurai