தமிழகத்தில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “ஃபனி புயல் நம்மை கடந்துவிட்டது. அடுத்து வரும் நாட்களில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 40 டிகிரிக்கும் அதிகரிக்கும். வடமேற்கில் இருந்து வரும் தரைக்காற்று மிகவும் வறண்டு தமிழக கடற்கரை பகுதிகளுக்கும், அதன் அருகே உள்ள மாவட்டத்துக்கும் உந்தித் தள்ளும். ராயலசீமா பகுதியில் இருக்கும் வெப்பம் தமிழகத்திற்கு இடம் மாறும். இதனால், அடுத்துவரும் நாட்களில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும். குறிப்பாக வேலூர், திருத்தணியில் அதிகபட்சமாக 44 டிகிரி வரை உயரக் கூடும்.
மேலும் படிக்க – Cyclone Fani, Weather forecast today LIVE News Updates
திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் வரும் நாட்களில் அதிகபட்சமாக வெயில் 42 டிகிரி வரை உயரக் கூடும். மதுரை, நாமக்கல், திருச்சி, நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து அதிகபட்சமாக 41 முதல் 42 டிகிரி வரை இருக்கும்.
மேலும் படிக்க – ஃபனி புயல் : ஒரு சுவாரசிய பார்வை… ஏப்ரல் – மே மாதங்களில் உருவாகும் புயல்களால் ஏற்படும் தாக்கங்கள் என்ன?
கரூர், சேலம், தர்மபுரி, ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் வெப்பம் 40 முதல் 41 டிகிரி வரை இருக்கும். அதேசமயம், கன்னியாகுமரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் வெப்பம் உயராது.
சென்னையைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 40 டிகிரி வெப்பமும், சென்னை புறநகர் பகுதியில் 42 டிகிரி வரையும் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும்.
வரும் நாட்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், வறட்சியுடன் கூடிய வெப்பமும் இருப்பதால், வெளியே செல்லும் போது மக்கள் குடை எடுத்துச் செல்வது அவசியம். அதிகமான தண்ணீர், பழங்கள், பழச்சாறு குடிப்பதன் மூலம் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.