Type Here to Get Search Results !

பூமியை கண்காணிக்க பி.எஸ்.எல்.வி. சி.46 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

  ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி.46 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான்விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி46 ராக்கெட், ரீசாட் 2பி செயற்கைகோளுடன் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து காலை 5.27 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ரீசாட்-2பிஆர்1’ என்ற பூமியை கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட
செயற்கைகோளை இந்த ராக்கெட் சுமந்துகொண்டு செல்கிறது. அதிகாலை வேளையில், வெண்ணிறப் புகையையும், சிவப்பும் மஞ்சளும் கலந்த நெருப்பை உமிழ்ந்தபடி விண்ணில் பாய்ந்த ராக்கெட்டைக் கண்டு விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதற்கான இறுதிகட்ட பணியான 25 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று அதிகாலை 4.27 மணிக்கு தொடங்கியது. ராக்கெட் ஏவப்படுவதைப் பார்க்க ஏவுதளத்தில் முதன்முறையாக பொதுமக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இஸ்ரோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்திருந்தவர்கள் தகுந்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு ராக்கெட் ஏவப்படுவதைக் கண்டு களித்தனர். விண்வெளி ஆராய்ச்சியை மேம்படுத்துவதுடன், விண்வெளி தொடர்பான தகவல்களை பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்காக ராக்கெட் ஏவுவதை பார்வையிட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 5 ஆயிரம் பேர் அமர்ந்து பார்வையிடும் அளவில் ‘கேலரி’ அமைக்கப்பட்டு இருந்தது. 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் இஸ்ரோ இணையதளத்தில் பெயர் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். அதன்படி பலர் பதிவு செய்து உள்ளனர். இந்த ‘கேலரி’, ஏவுதளத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கிருந்து பார்வையாளர்களால் ஏவுதளத்தை பார்வையிட முடியும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.


Top Post Ad

Below Post Ad