ஐபிஎல் 2019 விருதுப் பட்டியல்: ஊதா, ஆரஞ்சு தொப்பி யாருக்கு, ஸ்டெயிலான வீரர் யார்?
12-வது ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், பல்வேறு பிரிவுகளில் வீரர்களுக்கும், அணிக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
12-வது ஐபிஎல் சீசன் தொடர் நடந்து முடிந்துள்ளது. இதில் ஹைதராபாத்தில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்து 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இந்தப் போட்டியின் முடிவில் பல்வேறு வீரர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
ஆட்டநாயகன் விருது:
இறுதிப்போட்டியில் 4 ஓவர்கள் வீசி, 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா ஆட்டநாயனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
சிறந்த மைதானம்:
மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானம், ஹைதராபாத் கிரிக்கெட் மைதானம் ஆகியவற்றுக்கு 2019-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சிறந்த மைதான பராமரிப்புக்கான விருது வழங்கப்பட்டது. இரு மைதானப் பராமரிப்புக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது.
2019-வளர்ந்து வரும் இளம் வீரர்:
2019 ஐபிஎல் போட்டியில் வளர்ந்து வரும் வீரராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுப்மான் கில் தேர்வு செய்யப்பட்டார். இவர் தனது பேட்டிங் ஸ்டிரைக் ரேட்டை 124.30 ஆக வைத்திருந்தார். 19 வயதான கில் 3 சதங்கள் உள்பட 296 ரன்கள் சேர்த்திருந்தார். சுப்மான் கில்லுக்கு வளர்ந்து வரும் வீரருக்கான விருது வழங்கப்பட்டது.
நேர்மையான அணிக்கான விருது:
களத்தில் எதிரணி வீரர்களுடன் நட்புறவுடன் பழகுவது, நடுவரின் முடிவை மதிப்பது, குறித்த நேரத்தில் போட்டியை முடிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் கீழ் 2019-ஐபிஎல் நேர்மையான அணியாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தேர்வு செய்யப்பட்டது.
2019-ஐபிஎல் சீசனில் சிறந்த கேட்ச்:
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் கெய்ரன் பொலார்ட்டுக்கு சிறந்த கேட்ச் பிடித்த வீரருக்கான விருது வழங்கப்பட்டது. 15- லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர் ரெய்னா அடித்த ஷாட்டை பவுண்டரி லைனில் தாவிக்குதித்து டைவ் அடித்த பொலார்டின் கேட்ச் சிறந்ததாகத் தேர்வு செய்யப்பட்டது.
மதிப்பு மிக்க வீரர், அதிக ஸ்ட்ரைக்ரேட் விருது:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆன்ட்ரூ ரஸலுக்கு மதிப்பு மிக்க வீரர் விருது வழங்கப்பட்டது. இந்த சீசனில் ரஸல் 510 ரன்கள் குவித்து, 204 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். இதில் 4 அரை சதங்கள் அடங்கும். கொல்கத்தா அணி தொடர்ந்து 6 போட்டிகள் தோல்வி அடைந்த நிலையில், ரஸலின் அதிரடியாக ப்ளே ஆப் சுற்றுவரை நெருங்கி வந்து வாய்ப்பை இழந்தது. கொல்கத்தா அணியின் மேட்ச் வின்னராக ரஸல் இருந்தார்
அதிவேக அரை சதம்
12-வது ஐபிஎல் சீசனில் அதிவேகமாக அரை சதம் அடித்த வீரராக மும்பை இந்தியன்ஸ் வீரர் ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டார். கேகேஆர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 17 பந்துகளில் பாண்டியா அரை சதம் அடித்தார். 34 பந்துகளில் 91 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்
12-வது ஐபிஎல் சீசனில் ஊதா நிறத் தொப்பியை சிஎஸ்கே வீரர் இம்ரான் தாஹிர் பெற்றார். டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் ரபாடா 25 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த நிலையில், அவரை முறியடித்து 17 போட்டிகளில் தாஹிர் 26 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்த விருதைப் பெற்றார்.
டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகினார். அப்போதே ரபாடா 25 விக்கெட்டுகள் என்ற நிலையில் முதலிடத்தில் இருந்தார். ஒருவேளை உடல்நலம் நன்றாக இருந்து ரபாடா தொடர்ந்து பந்துவீசி இருந்தால், இந்த விருது அவருக்குக் கிடைத்திருக்கும்.
ஸ்டைலிஷ் வீரர் விருது
12-வது ஐபிஎல் சீசனில் ஸ்டைலிஷாக பேட் செய்த வீரர் விருது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் கே.எல்.ராகுலுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை அவரின் நண்பர் ஹர்திக் பாண்டியா பெற்றுக்கொண்டார்.
அதிக ரன்கள் குவித்த வீரர்
12-வது ஐபிஎல் சீசனில் அதிகமான ரன்கள் குவித்த வீரராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டார். 12 போட்டிகளில் 692 ரன்களை வார்னர் சேர்த்தார். இவரின் சராசரி 69 ரன்களாக இருக்கிறது. தொடர்ந்து 5-வது ஆண்டாக வார்னர் 500 ரன்களுக்கு மேல் சேர்த்து வருகிறார்.