Type Here to Get Search Results !

தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தபால் ஓட்டுக்களை தடுக்க முயற்சி: சான்றிதழ் தராமல் இழுத்தடிப்பு தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்



தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 18ம் தேதி நடக்கிறது. இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தலில் 8 தொகுதியில் வெற்றி பெற்றால் தான் அதிமுக ஆட்சியில் நீடிக்க முடியும் என்பதால் ஆளுங்கட்சியினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒன்றாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தபால் வாக்குகள் எதிர்கட்சிக்கு செல்வதை தடுக்கும் வகையில் அதிகாரிகளை ஒரு கருவியாக பயன்படுத்தும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் கடந்த 2016ல் நடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தபால் ஓட்டு தான் வெற்றி தோல்வியை தீர்மானித்தது. குறிப்பாக பெரம்பூர், ஓட்டப்பிடாரம், ராதாபுரம் உள்பட 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தபால் ஓட்டு தான் வெற்றியை தீர்மானித்தது.

இதில் திமுக பெற்ற வாக்குகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதனால், சில இடங்களில் 50, 100 ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றது. இந்த நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர், போலீசார் தபால் ஓட்டுக்களை முன்கூட்டியே ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாங்கிவிட வேண்டும் என்று அதிமுக முடிவு செய்தது.

அரசு ஊழியர்கள் எதிராக இருப்பதால் முதலில் போலீஸ் உயர் அதிகாரிகளை அணுகி போலீசாரின் தபால் ஓட்டுக்களை பெற அதிமுக தரப்பில் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அப்படி தபால் ஓட்டுக்களை பெற்று தந்தால் உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, வேண்டும் இடத்துக்கு பணியிடம் மாற்றம் வழங்கப்படும் என்றும் அதிமுக தரப்பில் ஆசை வார்த்தைகள் அள்ளி வீசப்பட்டது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் 2ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. இதில் வாக்குப்பதிவு இயந்திரம், வி.வி.பேட் உள்ளிட்டவைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் 3.5 லட்சம் பேர் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்றனர். சென்னையை பொறுத்தவரை 20,791 பேர் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர். 3ம் மற்றும் 4ம் கட்ட பயிற்சி வகுப்பு 14 மற்றும் 17ம் தேதி நடக்கிறது. பயிற்சி வகுப்புக்கு வந்தவர்கள் அங்கேயே தபால் ஓட்டுக்களை அளித்தனர். அதில் குறிப்பாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் இடங்களில்மட்டும் தபால் ஓட்டுக்கள் வாங்கப்பட்டது. ஏதாவது பிரச்னை வந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு சில எம்பி தொகுதிகளில் மட்டும் தபால் வாக்குகள் போட அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

உதாரணத்துக்காக விளாத்திக்குளத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவருக்கு வைகுண்டம் அரசு பள்ளியில் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டிருக்கும். தென்சென்னை மக்களவை தொகுதியில் உள்ள ஆசிரியருக்கு காஞ்சிபுரத்தில் பணி போடப்பட்டிருக்கும். இதில் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்டவர்களுக்கு மட்டும் தபால் ஓட்டுக்கள் போட அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி முதலில் போலீசார் வாக்களித்தனர். அதேபோல தங்களுக்கு ஆதரவான அரசு ஊழியர்களுக்கு அந்த இடத்திலேயே வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.சில ஆசிரியர்கள் இங்கே வாக்களித்தால் யாருக்கு வாக்களித்தோம் என்பதை பார்க்க அதிக வாய்ப்பு உள்ளது. அதனால், பணி செய்யும் இடத்தில் வாக்களிக்கிறோம் என்று கூறி சென்று விட்டனர். அரசுக்கு எதிராக செயல்பட்ட பல ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டுக்கள் போட அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களுக்கு அடுத்த வாரம் தபால் ஓட்டு போட அனுமதி வழங்கப்படும். அதாவது தேர்தல் பயிற்சி முகாமில் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் ஆயிரத்து 600 பேர் பயிற்சிக்கு வந்தனர். 600 பேருக்கு தான் தபால் ஓட்டு போட வாய்ப்பு வழங்கப்பட்டது. மற்றவர்கள் இது குறித்து தேர்தல் அதிகாரியிடம் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு பிறகு அவர்களுக்கு தபாலில் வாக்களிக்க வாய்ப்பு வழங்குவதாக உறுதியளித்தனர். மேலும் இந்த பயிற்சி நடந்த இடத்தில் வாக்குப்பெட்டி ஒன்றை வைத்து அதில் பயிற்சி முகாமிற்கு வந்தவர்கள் தபால் ஓட்டுக்களை போட சொல்லி அதிகாரிகள் வற்புறுத்தினர். இங்கே நாங்கள் தபால் ஓட்டுக்களை போட்டால் பிரித்து பார்ப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால், எங்களுக்கு எங்கே தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளதோ, அங்கு போய் தபால் ஓட்டுக்களை அனுப்புகிறோம் என்று தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தேர்தல் பணிக்கு செல்வதற்கான சான்றிதழையும்(இடிசி) வழங்குவதிலும் அதிகாரிகள் இழுத்தடித்து உள்ளனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் தபால் வாக்குகளை முழுமையாக செலுத்த முடியும என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல தமிழகம் முழுவதும் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன.இந்த நிலையில் திமுகவின் சட்டத்துறை சார்பில் அதன் செயலாளர் கிரிராஜன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு இந்த பிரச்னை சம்பந்தமாக மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: தேர்தல் பணியில் நியமிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகளை அளிப்பதில் மற்றும் அந்த தேர்தல் பணி சான்று பெறுவதிலும் பல்வேறு பிரச்னை இருப்பதாக திமுக தலைமை அலுவலகத்துக்கு தமிழகம் முழுவதும் இருந்து புகார்கள் வந்தன. தேர்தல் பயிற்சி அதிகாரிகளின் இது போன்ற செயல்களுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 7.3.14 அன்று தேர்தல் பணி சான்று வழங்குவது சம்பந்தமாக ஒரு வழிகாட்டு நெறிமுறையை ஏற்கனவே தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஆனால், தற்போது தேர்தல் அதிகாரிகள் இந்த வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்று புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்து தபால் வாக்கு அளிக்கவும், தேர்தல் பணி சான்றை வழங்கவும் உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். அந்தந்த வாக்குசாவடிகளில் 100 சதவீதம் தபால் வாக்குகள் பதிவாவதற்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுப்பதுடன் அந்த ஊழியர்கள் தபால் வாக்குகளை அளிப்பதற்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Top Post Ad

Below Post Ad