Type Here to Get Search Results !

டிக் டாக் செயலி மீதான தடையை நிபந்தனையுடன் நீக்கியது ஐகோர்ட்





சீனாவில் இருந்து ‘டிக்-டாக்’ என்னும் செயலி கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த செயலியை பயன்படுத்திய 400-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல்வேறு வகையிலும் தீமையை தரும் டிக்-டாக் செயலிக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, டிக்-டாக் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். டிக்-டாக் செயலி மூலம் எடுத்த வீடியோக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக்கூடாது என்று உத்தரவிட்டது. இந்த வழக்கு குறித்து மத்திய அரசு பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

இதற்கிடையே, அந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு கடந்த 16ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, டிக்-டாக் செயலியை உருவாக்கிய நிறுவனம் தரப்பில் ஆஜரான வக்கீல் ஐசக் மோகன்லால், “டிக்-டாக் செயலியை 2 வகையாக கண்காணித்து வருகிறோம். இனிமேல் தவறான நோக்கத்துடன் வீடியோக்கள் பதிவு செய்யப்படமாட்டாது. கோர்ட்டு உத்தரவுக்கு பின்பு, பல லட்சம் வீடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளன. கோர்ட்டு தடை விதித்து இருப்பதால், தற்போது டிக்-டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. எனவே அந்த தடையை விலக்கி உத்தரவிட வேண்டும்” என்று வாதாடினார்.

இதற்கு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். மேலும், “இந்த வழக்கு குறித்து மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனம் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே டிக்-டாக் செயலி மீதான நடவடிக்கை குறித்து மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் உத்தரவிட்டு, விசாரணையை 24-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், ‘சமூக சீர்கேட்டை உருவாக்கும் வீடியோக்கள் சிறுவர், சிறுமியர் தொடர்பான ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யக்கூடாது’ என்ற நிபந்தனையுடன் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது.

டிக் டாக் நிறுவனத்தின் சார்பில் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் எனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.


Top Post Ad

Below Post Ad