வங்கக்கடலில் ஏப்ரல் 29-ம் தேதி புயல் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது: வங்கக்கடலில் வரும் 29-ம் தேதி புயல் உருவாகும். 29-ம் தேதி முதல் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். 25-ம் தேதி இந்திய பெருங்கடல்-தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும். அந்த தாழ்வுப்பகுதி 27-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெற்று 29-ம் தேதி புயலாக மாறும் என அவர் கூறினார். தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சேலம் ஆத்தூரில் 10 செ.மீ., தேனி பெரியகுளத்தில் 6 செ.மீ., கடலூர், மேட்டூர், ஓசூர், கொடைக்கானல் 6 செ.மீ., ஊத்தங்கரை, காஞ்சிபுரம், சத்திரப்பட்டி ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கி வெயில் வாட்டி வதைத்து வந்தாலும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் ஏப்ரல் 29-ம் தேதி புயல் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.