Type Here to Get Search Results !

தேர்தலை முன்னிட்டு பாலிடெக்னிக் தேர்வுகள் முன்கூட்டியே தொடக்கம்: தேர்வுக்கால அட்டவணை வெளியிடாததால் மாணவர்கள் தவிப்பு  












மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாலிடெக்னிக் தேர்வுகள் முன்கூட்டியே மார்ச் 29-ல் தொடங்குகிறது.

 அதேநேரம் பாடவாரியாக தேர்வு அட்டவணை வெளியிடாததால் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

தமிழக உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் 46 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன.


 இதில் 21,000 மாணவர்கள் வரை படித்து வருகின்றனர். இவர்களுக்கு நடப்பு ஆண்டில் கல்லூரி வேலை நாட்கள் மார்ச் 22-ம் தேதியுடன் முடிகின்றன.


தொடர்ந்து ஏப்ரல் 4-ம் தேதி முதல் பருவத் தேர்வுகள் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18-ல் ஒரேகட்டமாக நடத்தப்பட உள்ளது. இதையடுத்து பாலிடெக்னிக் தேர்வுகளை முன்கூட்டியே தொடங்க முடிவாகியுள்ளது.


 இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பருவத் தேர்வு தேதிகள் மாற்றப்படுகின்றன.

மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வு மார்ச் 29-ல் தொடங்கி ஏப்ரல் 13-ம்தேதி வரை நடத்தப்படும். அதன்பின் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 14 முதல் 21-ம் தேதி வரை விடுப்பு வழங்கப்படும்.


 தொடர்ந்து ஏப்ரல் 22-ல் மீண்டும் தேர்வுகள் தொடங்கி, ஏப்ரல் 26-ம் தேதி வரை நடைபெறும்.

குழப்பம் நீடிப்பு

செய்முறைத் தேர்வு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 22 முதல் மே 5-ம் தேதி வரையும், 2, 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 27 முதல் மே 12-ம் தேதி வரையும் நடைபெறும். விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் மே 13-ல் தொடங்கி மே 21-ம் தேதியுடன் முடியும்’’ என கூறப்பட்டுள்ளது.


 அதேநேரம் பாடவாரியான தேர்வு அட்டவணை இதுவரை வெளியாகாததால் தேர்வுக்கு தயாராவதில் மாணவர்கள் இடையே குழப்பம் நீடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுகுறித்து அரசு பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்கள் கூறும்போது, ‘‘பொதுவாக தேர்வுக் கால அட்டவணையைப் பின்பற்றிதான் மாணவர்கள் திட்டமிட்டு நேரம் ஒதுக்கி படிப்பார்கள்.


எந்தெந்த பாடத்துக்கு அதிக நாட்கள் விடுப்பு உள்ளதோ, அதை விடுத்து குறைந்த விடுப்புள்ள பாடங்களை முதலில் படித்து முடிப்பது வழக்கம்.


இதற்காகவே பெரும்பாலான கல்லூரிகளில் வருடாந்திர கால அட்டவணை, கல்வி ஆண்டு தொடக்கத்திலேயே தரப்படுகிறது. அது மாணவர்கள் தேர்வுக்கு தயாராக மிக உதவியாக இருக்கும்.


 ஆனால், பாலிடெக்னிக் கல்லூரிகளைப் பொறுத்தவரை கடந்த 3 ஆண்டுகளாகவே பருவத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை தாமதமாகத்தான் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டு வருகிறது.

தேர்வு தொடங்கும் நாளை ஒரு மாதம் முன்பே அறிவிக்கின்றனர்.


 ஆனால், பாடவாரியான கால அட்டவணை ஒருவார இடைவெளியிலேயே வெளியிடப்படுகிறது. இதனால் மாணவர்கள் பாடங்கள் வாரியாக நேரம் ஒதுக்கி படிக்க முடியாமல் தவிக்கின்றனர்.

இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பருவத் தேர்வுகள் மார்ச் 29-ல் தொடங்குகிறது.


 ஆனால், இன் னும் பாடவாரியான தேர்வு கால அட்டவணை வெளியாகவில்லை. பள்ளி மாணவர்களுக்குகூட தேர்வுதேதிகளை அரசு முன்கூட்டியே அறிவிக்கிறது.

 அதேபோல், பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் நலன் கருதி தேர்வு கால அட்டவணையை பருவத் தொடக்கத்திலேயே வெளியிட முன்வர வேண்டும்’’ என்றனர்.


Top Post Ad

Below Post Ad