கூகுள் மேப்ஸ் சேவையில் பயனர்கள் விபத்துக்கள் மற்றும் வேக கட்டுப்பாடு பகுதிகளை தெரிவிக்க புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக இதேபோன்ற வசதியை வேஸ் எனும் நேவிகேஷன் செயலியில் ஸ்பீட் டிராப் மற்றும் விபத்துக்களை தெரிவிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.தற்சமயம் கூகுள், இந்த வசதியை உலகம் முழுக்க அறிமுகம் செய்திருக்கிறது. இந்த அம்சம் முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு சாதனங்களில் மட்டும் சேர்க்கப்பட்டிருக்கிறது. விரைவில் இந்த அம்சம் ஐபோன்களிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
இதுகுறித்து ரெடிட் வலைதளத்தில் வெளியாகி வரும் தகவல்களில் நேவிகேஷன் மோடில் விபத்து மற்றும் ஸ்பீட் டிராப் வசதி ஆண்ட்ராய்டு சாதனங்களில் உலகம் முழுக்க பரவலாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் மேப்ஸ் செயலியில் ஆட் எ ரிபோர்ட் (Add a report) வசதி சேர்க்கப்பட்டிருக்கிறது. வேஸ் செயலியில் இருப்பதை போன்றே புதிய அம்சமும் கூகுள் மேப்ஸ் செயலியில் பயனர்களை விபத்துக்கள் மற்றும் வேக கட்டுப்பாட்டு பகுதிகள் பற்றிய விவரங்களை பதிவிடலாம். பயனர்கள் திரையின் கீழ்புறம் இருக்கும் அம்புகுறி அல்லது நேவிகேஷன் ஸ்கிரீனில் இருக்கும் பட்டனை க்ளிக் செய்து Add a report வசதியை பயன்படுத்தலாம்.
இதனை க்ளிக் செய்ததும் விபத்து அல்லது வேக கட்டுப்பாட்டு பகுதி பற்றிய விவரங்களை கூகுளுக்கு நேரடியாக தெரிவிக்க முடியும். இதேபோன்று மற்றவர்கள் பதிவிட்டிருக்கும் கருத்துக்களையும் கூகுள் மேப்ஸ் காண்பிக்கும். இதனால் பயணத்தை அதே வழியில் தொடரலாமா அல்லது வேறு பாதையில் செல்ல வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.விபத்து மற்றும் வேக கட்டுப்பாட்டு பகுதிகளை தெரிவிக்கும் வசதி பற்றி கூகுள் சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.