இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன், தன்னை விடுவிப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது பற்றித் தெரிய வந்தவுடன் பாகிஸ்தான் துருப்புகளுடன் நடனமாடி கொண்டாடினார் என்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அபிநந்தன் பாகிஸ்தான் வசம் பிடிபட்டது, இந்தியாவிற்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. இரு தரப்பினரும் பதற்றத்தைத் தணிக்க வேண்டிய அழுத்தத்தில் இருந்தனர்.
அமைதியின் பேரில் விங் கமாண்டர் அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என்று வியாழக்கிழமையன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.
அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, காணொளி ஒன்று பல சமூக ஊடக தளங்களில் வைரலாகியது.
பேஸ்புக் மற்றும் யூ-டியூபில் "#WelcomeHomeAbhinandan" மற்றும் "#PeaceGesture" போன்ற ஹேஷ்டாகுகளில் அந்த காணொளி பகிரப்பட்டது.
இந்த 45 வினாடி காணொளி ஆயிரக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டுள்ளது.
காணொளியை ஆராய்ந்த பிபிசியின் உண்மை பரிசோதிக்கும் குழு, இது போலியானது என்பதை கண்டுபிடித்துள்ளது. உண்மையில் இந்த நான்கு நிமிட காணொளி, 2019 பிப்ரவரி 23ஆம் தேதியன்று பகிரப்பட்டதாகும்.
பாகிஸ்தானிய நாட்டுப்புறப் பாட்டிற்கு, அந்நாட்டின் விமானப்படை அதிகாரிகள் நடனமாடுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.
பிப்ரவரி 23ஆம் தேதிக்கு முன்னதாகவே அந்த காணொளி எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானிய துருப்புகளால் பிப்ரவரி 27ஆம் தேதிதான் பிடிக்கப்பட்டார்.
மேலும், அந்த காணொளியில் இருக்கும் அதிகாரிகள், பாகிஸ்தானிய சீருடைகளையே அணிந்திருக்கிறார்கள்.