வங்கிகளுக்கு வாரம்தோறும் 2 நாட்கள் விடுமுறை என சமூக வலைதளங்களில் பரவியுள்ள தகவல் உண்மையில்லை எனவங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்கிகளுக்கு முன்பு வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை முழு நாளும், சனிக்கிழமை அரைநாளும் விடுமுறை விடப்பட்டு வந்தது.
ஊழியர்கள் கோரிக்கைமத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிப்பது போன்றுதங்களுக்கும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்க வேண்டும் என வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதை ஏற்று கடந்த 2015-ம் ஆண்டு முதல் மாதம்தோறும் 2 மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு முழுநாள் விடுமுறையும், முதல் மற்றும் 3-ம் சனிக்கிழமைகளில் வங்கிகள் முழுநாள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி வங்கிகள் தற்போது செயல்பட்டு வருகின்றன.
தவறான தகவல்
இந்நிலையில், வங்கிகளுக்கு இனி வாரம்தோறும் 2 நாட்கள் விடுமுறை விடப்படும் என்றும், இதுதொடர்பாக மும்பையில் இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.
இத்தகவல் முற்றிலும் தவறானது என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறும்போது, ‘‘வங்கிகளுக்கு வாரம்தோறும் 2 நாட்கள் விடுமுறை என சமூக வலைதளங்களில் பரவியுள்ள தகவல் முற்றிலும் தவறானது.
ஊதிய உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விடுமுறை குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை’’ என்றனர்