வாக்களிக்க 11 அடையாள ஆவணங்கள்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு*
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க, வாக்காளர் அடையாள அட்டையை அளிக்க இயலாதவர்கள், 11 வகையான அடையாள ஆவணங்களைக் காண்பித்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக தேர்தல் துறை புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
வாக்களிப்பதற்கு முன்பாக வாக்குச்சாவடியில், வாக்காளர்களின் புகைப்பட அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும். இந்த அட்டையை அளிக்க இயலாதவர்கள் 11 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பிக்கலாம்.
அதன்படி,
கடவுச்சீட்டு,
ஓட்டுநர் உரிமம்,
மத்திய-மாநில அரசுகளின் பொதுத் துறை நிறுவனங்கள் அல்லது வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்,
புகைப்படத்துடன் கூடிய வங்கி-அஞ்சலகக் கணக்குப் புத்தகங்கள்,
வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை,
தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் அளிக்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணி அட்டை,
தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை,
புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்,
நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை,
ஆதார் அட்டை ஆகிய 11 ஆவணங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.
புகைப்பட வாக்காளர் அட்டை: தேர்தல் ஆணையத்தால் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை தொடர்ந்து அளிக்கப்படும். ஆனாலும், இந்த அட்டை மட்டுமே தேர்தலில் வாக்களிப்பதற்கான ஆவணமாகக் கருதப்படாது. வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை வைத்திருப்பதால் மட்டும் ஒரு வாக்காளர் தனது வாக்கைச் செலுத்தி விட முடியாது. அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் துறை தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது