புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்திய விமானப்படை பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் புகுந்து தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளையும் முகாம்களையும் அழித்ததான செய்திகளையடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியான பல புகைப்படங்கள் போலியானவை, வேறொரு சந்தர்ப்பத்தின் நிகழ்வுகளின் புகைப்படங்கள் என்பதை ஆல்ட் நியூஸ் ஊடகம் அம்பலப்படுத்தியுள்ளது.
‘ஐ சப்போர்ட் அமித் ஷா’ என்ற சமூகவலைத்தளப் பக்கத்தில் பாலாகோட் தாக்குதலுக்குப் பிறகு பதிவிடப்பட்ட போஸ்ட்டில் வெளியிட்ட புகைப்படத்தின் காட்சி பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் 2005ம் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தினால் ஏற்பட்ட உயிர்ச்சேத, பொருட்சேத காட்சியாகும்.
இந்த பூகம்பம் பற்றி அப்போது பிபிசி வெளியிட்ட செய்தியில், “இந்த பூகம்பம் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கான் ஆகியவற்றை பாதித்தது. 75,000 பேர்கள், பெரும்பாலும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியிலானவர்கள்” என்று வெளியிட்ட புகைப்படம்தான் தற்போது ஐ சப்போர்ட் அமித் ஷா என்ற வலைத்தளப் பக்கத்தில் பாலகோட் தாக்குதலாக போலியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் மேலும் பல சமூகவலைத்தளங்களில் பகிரவும் பட்டுள்ளது.
2005 பூகம்பத்தில் பலியானவர்களின் உடல்களைக் காட்டி இந்தியத் தாக்குதலின் விளைவாகச் சித்தரிக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது.
பாலாகோட் இந்தியத் தாக்குதலுக்குப் பிறகு வெளியான ஏகப்பட்ட புகைப்படங்களில் இன்னொன்று நவம்பர் 3, 2014-ல் பாகிஸ்தான் தாலிபான் தீவிரவாதிகள் இந்திய-பாக் எல்லையில் நடத்தப்பட்டு பலர் இறந்தனர். இதுவும் வாட்ஸ் ஆப்பில் தற்போது நடந்த தாக்குதலின் விளைவாக போலியாகச் சித்தரிக்கப்பட்டு, பகிரப்பட்டுள்ளது.
இன்னும் சில பகிர்வுகளில் வந்த புகைப்படம் ஒன்று டிசம்பர் 19, 2014-ல் பாகிஸ்தான் ராணுவம் தாலிபான் தீவிரவாதிகள் மீது நடத்திய தாக்குதலில் பலியானதாகக் காட்டிய தாலிபான் தீவிரவாதிகளின் படம். அதை பாலாகோட் தாக்குதல் விளைவாகச் சித்தரிக்கப்பட்டு பரப்பட்டது.
ஆல்ட் நியூஸ் என்ற ஊடகம் இந்தப் படங்களை கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலை வைத்து உண்மைத்தன்மையை அம்பலப்படுத்தியது. ஆகவே வாசகர்கள் சமூகவலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் போன்றவற்றில் இது தொடர்பாக பகிரப்படும் புகைப்படங்களின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வது நல்லது.
Source The Hindu Tamil