கிரிக்கெட் வீரர் தோனிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம். தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணிக்கு பல்வேறு கோப்பைகளை வெற்றி பெற்றுத் தந்தவர். டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
அப்போது பாதுகாப்பு அதிகாரிகளையும் மீறி ரசிகர் ஒருவர் இந்திய தேசியக் கொடியுடன் மைதானத்துக்குள் நுழைந்தார். அவர் நேராக தோனியிடம் ஓடி வந்து அவரது காலில் விழுந்தார். உடனே தோனி, தேசியக்கொடி காலில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக, ரசிகரை தூக்குவதற்கு முன்னர் அவரிடம் இருந்த தேசியக் கொடியை வாங்கினார். தேசியக் கொடியை அவமதிக்கக் கூடாது எனக் கருதி தோனி செய்த செயல் அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.