Type Here to Get Search Results !

அரசு அலுவர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட `மொபைல் ஆப்' - மதுரையில் அறிமுகம்!






மிழ்நாடு அரசு அலுவலர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கான `கைபேசி செயலி' (மொபைல் ஆப்) தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் அறிமுகம் செய்யப்பட்டது. மாநில அளவிலான காப்பீட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில், மதுரை மாநகர போலீஸ் துணை ஆணையர் மகேஷ் இந்தப் புதிய கைபேசி செயலியை அறிமுகப்படுத்தி வைத்துப் பேசினார்.

``புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரும் வரம். உடல் நலம் பாதிக்கப்படும் அரசு ஊழியர்கள் எளிமையாக மீண்டு வர இந்தத் திட்டம் நிச்சயம் உதவும். சம்பளத்தை மட்டும் நம்பியுள்ள அவர்களுக்கு இது மிகப்பெரும் உதவியாக இருக்கும். குறிப்பாகக் காவல்துறையில் பணியாற்றுவோருக்கு வேலைப்பளு காரணமாக இதய நோய், சர்க்கரைநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் வருகின்றன. இதுபோன்று திடீரென ஏற்படும் நோய்கள் மற்றும் பாதிப்புகளைச் சரிசெய்ய புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உதவும். 

எனக்குத் தெரிந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் விபத்தில் சிக்கினார். 70 சதவிகிதம் பாதிப்புக்குள்ளான அவருக்கு புதிய பென்ஷன் திட்டம் மூலம் உதவி கிடைத்ததால் அவரால் உடலளவிலும் மனதளவிலும் விரைவாக மீண்டுவர முடிந்தது. எனவே, இதை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தற்போது இதற்காக ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்''என்றார்.

மேலும் விழாவில், முதன்மைச் செயலாளர் மற்றும் கருவூலக் கணக்கு ஆணையர் எஸ்.ஜவஹர் பேசும்போது, ``இரவு பகலாக உழைத்து புதிய பென்ஷன் திட்டத்தை இந்தியாவின் நம்பர் ஒன் திட்டமாகக் கொண்டு வந்ததில் பலரது உழைப்பு அடங்கியுள்ளது. மனிதனுக்கு ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. உடல் ஆரோக்கிய விஷயத்தில் நாம் கவனமாக இருந்தாலும் சிலருக்கு நோய்கள் மற்றும் விபத்து காரணமாக பாதிப்புகள் வந்துவிடுகின்றன. அப்போது புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் போன்ற திட்டங்கள் உதவும். இந்தத் திட்டத்தை தமிழ்நாடு மட்டுமல்லாமல் பக்கத்து மாநிலங்களுக்கும் கொண்டு சென்று வருகிறோம்.



இதற்கு நிறைய வரவேற்பு கிடைத்துள்ளது. அரசு ஊழியர்கள், அரசு சார்ந்த ஊழியர்கள், அரசு ஊழியர்களின் குடும்பத்தினர், ஓய்வூதியம் பெறுவோர் என சுமார் 52,000 பேர் பயன்பெறுகின்றனர். 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 700 மருத்துவமனைகள்தான் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டிருந்தன. தற்போது சுமார் 1000 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. பெரிய நகரங்கள் மட்டுமல்லாமல் சிறிய நகரங்களிலும் மருத்துவ வசதியை எளிமையாகக் கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் பரவலாக மருத்துவமனைகளை இணைத்துள்ளோம். இந்தத் திட்டத்தின் விவரங்களை அறிந்துகொள்ள, திட்டம் பற்றிய முழுமையான விழிப்புணர்வு அடைய புதிய பென்ஷன் திட்டத்துக்கு ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அவசரக் காலங்களில் பயனாளிகள் ஆப் மூலம் இந்தத் தகவல்களை அறிந்துகொண்டு எளிமையாக மருத்துவச் சேவை பெறலாம்'' என்றார்.

அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2012-ல் தொடங்கப்பட்டது. 2016-ல் சில அம்சங்களைச் சேர்த்து மேம்படுத்தப்பட்ட புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தப் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அரசு ஊழியர்கள் 113 நோய்களுக்குச் சிகிச்சை பெறும் வசதிகள் உள்ளன.  



எப்படிப் பதிவிறக்கம் செய்வது? 

இதுகுறித்து அங்கிருந்த அதிகாரிகள் சிலரிடம் பேசும்போது, ``தமிழக அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தில் 2018 முதல் 2022-ம் ஆண்டு வரை சுமார் 37,00,167 பேர் பயனடையும்விதமாக ரூ. 29 கோடி வரை ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அலுவலர்களுக்கான செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப் ஸ்டோர் மூலம் ஐ.ஓ.எஸ் மூலம் (TNNHIS 2016) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை பெற்றவர்கள் தங்களின் அடையாள அட்டை எண் மூலம் (TNNHIS 2016) செயலியில் பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். காப்பீட்டுத் திட்ட அட்டை பெறாதவர்கள் மற்றும் படிவம் 7-ஐ சமர்ப்பிக்காத அரசு அலுவலர்கள் முறைப்படி படிவம் பெற்று அவற்றைப் பூர்த்தி செய்து பயன் பெறலாம்" என்றனர்.

ஏற்கெனவே கடந்த இரண்டு வருடமாக பரீட்சார்த்த நிலையில் இருந்துவந்த இந்தச் செயலி தற்போது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்மூலம் தற்போது பணியாற்றிவரும் அரசு ஊழியர்களும், அவர்களது குடும்பத்தினரும் பயன்பெறலாம். விரைவில் ஓய்வூதியம்பெறுவோரும் பயன்பெறும்விதத்தில் இந்தச் செயலி பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.


Top Post Ad

Below Post Ad