ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமா என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது. இதையடுத்து தூத்துக்குடியில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே 22ம் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி நடந்த முற்றுகை போராட்டம் கலவரமாக மாறியது. இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியாயினர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு பிறப்பித்த சிறப்பு உத்தரவின்பேரில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதை எதிர்த்து அந்த நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்கலாம் என அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. இதில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் தன் வாதத்தில்,”ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் பல விதிமுறைகளை இந்த விவகாரத்தில் கடைபிடிக்கவில்லை. கழிவுகளை அகற்றுவதில் உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை. ஆலை நிர்வாகத்தால் வெளியேற்றப்படும் சல்பரிக், காப்பர், ஜிப்ஸம் ஆகிய கழிவுகள் நிலத்தடி நீரை கடுமையாக மாசுபடுத்தியுள்ளது. இதற்கான ஆதாரங்கள் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலம் எடுக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக்குழு தாக்கல் செய்த அறிக்கையும், அங்கு இருக்கும் சூழலும் எதிர்மறையாக உள்ளது. அதில்உண்மை தன்மை கண்டிப்பாக கிடையாது. அவர்கள் ஆலை பகுதியில் இருக்கும் பாதிப்பு மற்றும் சுற்றுச்சூழல் கேடு ஆகியவை எதையும் கணக்கீடு செய்யாமல் ஆய்வறிக்கையை பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளனர். அதை அடிப்படையாக கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை ஏற்க இயலாது. அதனால் தீர்ப்பாயத்தின் உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் ஸ்டெர்லைட் ஆலை திறப்பை கடுமையாக எதிர்த்து வாதிட்டார். இதே கோரிக்கையை முன்வைத்து தமிழக வழக்கறிஞர்கள் விஸ்வநாதன் மற்றும் குருகிருஷ்ணகுமார் ஆகியோரும் வாதிட்டனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், ஆலையை திறக்க அனுமதிக்கும்படி வாதிட்டார். இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் கடந்த 7ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன் மற்றும் வினீத் சரண் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று காலை சுமார் 10.30மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளனர். இதையடுத்து இன்றைய தீர்ப்புக்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமா? அல்லது ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை தொடர்ந்து நீடிக்குமா என்பது தெரியவரும். போலீஸ் குவிப்பு: தீர்ப்பு இன்று வெளியாவதையொட்டி தூத்துக்குடியில் மீண்டும் பதற்றம் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதை தவிர்க்கும்பொருட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக நெல்லை, குமரி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள 1,500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வெளி மாவட்டங்களில் இருந்து போலீசாரின் கலவர தடுப்பு வாகனங்கள், சாலைகளில் வைக்கப்படும் பேரிகார்டுகள் ஆகியன எஸ்பி அலுவலக கவாத்து மைதானத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். பல்வேறு முக்கியப் பகுதிகளில் இருந்து வந்துள்ள போலீசார் திருமண மண்டபம், சமுதாய நலக்கூடம் உள்ளிட்ட பகுதிகளில் இரவில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் தூத்துக்குடி பகுதியில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Source: Dinakaran