தற்போது பல் சொத்தையை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து, எளிதாக குணப்படுத்தும் சிகிச்சைகள் வந்து விட்டன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பல் மருத்துவத்தில் ஒவ்வொரு நாளும் புதுப்புது கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது பல் சொத்தையை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து, எளிதாக குணப்படுத்தும் சிகிச்சைகள் வந்து விட்டன. பல்லில் ஏற்படுகிற சொத்தை பிரச்சனைகளுக்கு பல வருடங்களுக்கு முன்பு தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய உலோகங்களைப் பூசி பல் சொத்தையை மறைத்தனர்.
இன்றைய நாகரீக உலகில் தங்கப்பல்லையோ, வெள்ளிப்பல்லையோ பலரும் விரும்புவதில்லை.தங்களுடைய பற்கள் இயற்கையாகவும், வெண்மையாகவும் இருப்பதையே விரும்புகிறார்கள். பற்களில் படியும் கறைகளோ, மஞ்சள் நிற பற்களோ வெளியே தெரியக்கூடாது என்றும் நினைக்கின்றனர். டூத் பேஸ்ட் விளம்பரங்களில் வருவதுபோல் பளிச்சென்று முத்துப்பற்களே பலருக்கும் தேவையாக இருக்கிறது. அதற்கேற்ற வகையில் நிறைய முன்னேற்றங்களும் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, செயற்கைப் பற்கள் பொருத்தப் பயன்படுத்துகிற பொருட்களில் நிறைய முன்னேற்றம் வந்துவிட்டது. அதாவது, சொத்தையை அடைப்பதற்கு கறுப்பு கலர் ஃபில்லிங் முன்பு பயன்படுத்தப்பட்டது. இப்போது வெள்ளை நிறத்திலேயே ஃபில்லிங் வந்துவிட்டது.
பற்களில் சிறுசிறு புள்ளிகளாகக் காணப்படும் கறைகளைக் கூட மறைத்து இயல்பான பற்களைப்போல் காட்டும் அளவுக்கு தற்போது ஃபில்லிங் வந்துவிட்டது. பற்கள் என்ன நிறத்தில் இருக்கிறதோ, அதில் இருந்து சற்றும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு அதே நிறத்தில் ஃபில்லிங் செய்யும் வசதி வந்துவிட்டது. வெளித்தோற்றத்தில் ஃபில்லிங் செய்ததே தெரியாது.
பல் சொத்தையை ஆரம்பநிலையிலேயே கண்டுபிடிக்க இப்போது மாத்திரையும் வந்து இருக்கிறது. இந்த மாத்திரையை தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளித்தால் சொத்தை உள்ள இடங்களில் மட்டும் கறுப்பு நிறத்தில் புள்ளிகள் தென்படும். இதன்மூலம் சொத்தை உருவாக இருப்பதை ஆரம்பநிலையிலேயே கண்டுபிடித்துவிடலாம். எல்லாவற்றையும்விட முக்கியமாக, 6 மாதங்களுக்கு ஒரு முறை பற்களை பரிசோதித்துக் கொள்வது நல்லது!