Type Here to Get Search Results !

தேர்தல் பணிகளில் ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்ற அதிமுக கோரிக்கை நிராகரிப்பு: தமிழகத்தில் போதுமான அரசு ஊழியர்கள் இல்லை : தலைமை தேர்தல் அதிகாரி தகவல்





 





வாக்குப்பதிவு பணியில் ஆசிரியர்களுக்கு பதில் இதர துறை அரசு ஊழியர்களையும்  தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று அதிமுக கோரிக்கை வைத்தது.


 ஆனால் அனைத்து ஊர்களிலும் போதுமான அரசு ஊழியர்கள் இருப்பதில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.


 தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.


 அதன்படி தமிழகத்தில் தற்போது 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 பேர் இடம் பெற்றுள்ளனர்.


 இந்நிலையில் கடந்த 23ம் தேதி (சனி), 24ம் தேதி (ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடைபெற்றது.


 இந்த முகாமில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் மற்றும் 18 வயது நிறைவடைந்தவர்கள் தங்களின் பெயரை சேர்க்க ஆர்வமுடன் விண்ணப்பம் செய்தனர்.


இந்த சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மட்டும் சுமார் 6 லட்சம் விண்ணப்பம் செய்துள்ளனர்.


இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

 தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடத்துவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.


 எப்போது வேண்டுமானாலும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தமிழகம் வரலாம்.


 அதற்கு தயாராக இருக்க சொல்லியுள்ளோம். மக்களவை தேர்தலை முன்னிட்டு, போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தினார்.


 இன்று அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெறும். இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.


 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கான தேர்தல் ஆணையம் விடுத்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்து விட்டது.


 சில அதிகாரிகளை இடமாற்றம் செய்வது குறித்து ஆலோசனைகள் கேட்டுள்ளனர்.


 இதுபற்றி டெல்லிக்கு தகவல் அனுப்பியுள்ளோம்.

தமிழகம் முழுவதும் உள்ள 39 மக்களவை தொகுதியிலும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் வசதியுடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் (விவிபேட்) பயன்படுத்தப்படும்.


 அதேபோன்று, தற்போது தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றாலும், புதிய எந்திரத்தில்தான் வாக்குப்பதிவு நடைபெறும்.


 வாக்குப்பதிவு பணியில் ஆசிரியர்களுக்கு பதில் இதர துறை அரசு ஊழியர்களையும் தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 67,664 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளது.


 அனைத்து ஊர்களிலும் போதுமான அரசு ஊழியர்கள் இருப்பதில்லை. இது குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் கருத்து கேட்டுள்ளோம்.


 தமிழகம் முழுவதும் இரட்டை பதிவுகளை நீக்குவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி  அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


 இவ்வாறு அவர் கூறினார். தேர்தல் பணிகளில் ஆசிரியர்களை நியமிக்க கூடாது என அதிமுக கோரியிருந்தது.


அக் கோரிக்கையை ஏற்க முடியாது என தேர்தல் ஆணையம் தற்போது சூசகமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Source:  Dinakaran


Top Post Ad

Below Post Ad