பெங்களூரில் விமான கண்காட்சியில் விமான விபத்து, தீவிபத்து என தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளதால் பார்வையாளர்களும் அதிகாரிகளும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்திய விமானப் படை சார்பில் ஏரோ இந்தியா ஷோ கடந்த 20-ஆம் தேதி முதல் பெங்களூரில் யெலஹன்க்கா ஏர்பேஸ் பகுதியில் நடைபெற்று வருகிறது. 1996-ம் ஆண்டு முதல் இக்கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாளை முடிவடைய உள்ளது. இதில் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. இதில் விமான வர்த்தகர்களும் கல்வியாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் கலந்து கொள்வது வழக்கம். கடந்த இரு தினங்களுக்கு முன் விமான ஒத்திகையில் ஈடுபட்டிருந்த போது சூர்யகிரண் ஏரோபேடிக்ஸ் விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதியது. இதில் விமானி ஒருவர் உயிரிழந்தார். மற்ற இரண்டு விமானிகளும் சரியான நேரத்தில் அவசர கால பாராசூட் மூலம் தப்பித்ததாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அங்கு தீவிபத்து நடந்தது.இன்று விடுமுறை என்பதால் கண்காட்சியைக் காண ஏராளமானோர் அங்கு கூடினர். இந்தநிலையில் வாகன நிறுத்துமிடத்தில் இன்று தீவிபத்து ஏற்பட்டது. அங்கு புற்கள் தீப்பிடித்து அப்படியே அங்கு நின்றிருந்த கார் டயர்களுக்கு பரவியது. இதில் 300-க்கும் மேற்பட்ட கார்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாகின. விமானங்கள் மோதல், தீவிபத்து என கண்காட்சி நிகழ்ச்சியில் அடுத்தடுத்து துயரங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் அதிகாரிகளும் பார்வையாளர்களும் அதிர்ச்சியில் உள்ளனர். நாளை நிறைவு விழா நடத்த முடியுமா என்ற சந்தேகத்தில் அதிகாரிகள் உள்ளனர். கடந்த பிப்ரவரி 1ம் தேதி பெங்களூரில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் இந்திய விமானப்படை விமானம் விபத்திற்கு உள்ளானது. மிராஜ் -2000 ரக விமானம் சரியாக புறப்படும் நேரத்த்தில் டேக் ஆப் செய்யும் போது விபத்து ஏற்பட்டது.