Type Here to Get Search Results !

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு





தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான், தமிழ்நாட்டின் வளர்ச்சியாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு, எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும், என்று கருதிய ஜெயலலிதா, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பயன் அனைத்து மக்களையும் சென்றடையும் வண்ணம் பல்வேறு மக்கள்நலத் திட்டங் களை செயல்படுத்தினார்.

ஜெயலலிதா வகுத்து தந்த பாதையில் உறுதியாக நடக்கும் இந்த அரசு, ஏழை, எளிய மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, அவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல, பல்வேறு நல திட்டங் களையும், வளர்ச்சி திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது.

பல மாவட்டங்களில் கஜா புயலின் தாக்கத்தினாலும், பருவமழை பொய்த்ததன் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், குறிப்பாக விவசாய தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், பட்டாசு தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள், உப்பள தொழிலாளர்கள், காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதி உதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதனால், கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழை குடும்பங்களும், நகர்ப்புரத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்களும், ஆக மொத்தம் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழை குடும்பங்கள் தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி உதவியை பெறுவர். இதற்கென, 1,200 கோடி ரூபாய் 2018-2019 துணை மானிய கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள இந்த திட்டத்திற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

தொழிலாளர் நலவாரியங்கள் மூலம் பயனாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த பணம் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படலாம் என்றும் தெரிகிறது.

மேலும் நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும், பயனாளர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுவதில் எந்த பாதிப்பும் இருக்காது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Top Post Ad

Below Post Ad