ரயில்களை எந்தவிதமான சிக்கலின்றி எளிதாக இயக்கவும், பாதுகாப்பாகக் கொண்டு செல்லவும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பணியாளர்களை நிரப்பும் பணியை ரயில்வே மேற்கொண்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வேலைவாய்ப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப 1.30 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வரும் 28-ம் தேதியில் இருந்து தொழில்நுட்பப் பிரிவில் அல்லாதவர்கள் ஆன்லைனில் பதிவு செய்யலாம். ஜூனியர் கிளார்க், டைப்பிஸ்ட், அக்கவுண்ட் கிளார்க் டைப்பிஸ்ட், ரயில் கிளார்க், வர்த்தக மற்றும் டிக்கெட் கிளார்க், போக்குவரத்து உதவியாளர், சரக்கு பாதுகாவலர், மூத்த டிக்கெட் கிளார்க், மூத்த டைபிஸ்ட், இளநிலை கணக்காளர் தட்டச்சர், வர்த்தகப் பிரிவு உதவியாளர், ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட பிரிவுகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அடுத்த கட்ட ஆன்லைன் பதிவு மார்ச் 4-ம் தேதியில் இருந்து தொடங்கும். ஸ்டாப் நர்ஸ், சுகாதார ஆய்வாளர், மலேரியா தடுப்பு ஆய்வாளர், மருந்தாளுநர், ஈசிஜி தொழில்நுட்ப பிரிவு, சோதனைக்கூட உதவியாளர், சோதனைக்கூட கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மார்ச் 8-ம் தேதி தொடங்கும் ஆன்லைன் பதிவில் அமைச்சகப் பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. குறிப்பாக ஸ்டெனோகிராபர், தலைமை உதவியாளர், ஜூனியர் டிரான்ஸ்லேட்டர் (இந்தி). இந்த 3 பிரிவுகளில் இருந்தும் 30 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
எஸ்சி, எஸ்டி, ஓபிசி ஆகியோரைத் தவிர்த்து முதல் முறையாக பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கான பிரிவும் ஒதுக்கப்பட உள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஒதுக்கீடும் இருக்கிறது. அனைத்து விண்ணப்பங்களும் ஆன்லைன் மூலம் மட்டும் அனுப்பப்பட வேண்டும்.
ரயில்வே துறை ஏற்கெனவே பாதுகாப்பு பிரிவுகளில் 1.50 லட்சம் பேரை பணிக்கு எடுப்பதில் தீவிரமாக இருந்துவரும் நிலையில் இப்போது 1.30 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட உள்ளது
ஆன்லைனில் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் பணிக்கு எடுக்கப்படுவார்கள். www.indianrailways.gov.in என்கிற அதிகாரபூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.