Type Here to Get Search Results !

அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு எதிரான தண்டனை நிறுத்திவைப்பு: மேல்முறையீட்டுக்குச் செல்வதால் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு; ஜாமீனும் வழங்கியது

அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு எதிராக 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரது கோரிக்கையை ஏற்று நிறுத்தி வைத்தது சிறப்பு நீதிமன்றம். அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் பாலகிருஷ்ண ரெட்டி. இவர் மீதான வழக்கு ஒன்று எம்.பி., எம்.எல்.ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 1998-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாசனூர் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனையை தடை செய்யக் கோரி மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் பேருந்துகள் மீது கல்லெறியப்பட்டது.

பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்ட 108 பேர் மீது போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்ட பாலகிருஷ்ண ரெட்டி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 3 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.10,500 அபராதமும் விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார். இந்நிலையில் தான் மேல்முறையீடு செய்ய உள்ளதாக பாலகிருஷ்ண ரெட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவரது தண்டனையை ஒரு மாதகாலம் நிறுத்தி வைத்து அவருக்கு ஜாமீனும் வழங்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பேட்டி அளித்த அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, ''இந்த வழக்கு திமுகவின் சதியால் தொடரப்பட்டது. நாளையே சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்'' எனத் தெரிவித்தார்.


Top Post Ad

Below Post Ad