ஆவணங்களை சரி பார்க்காமல் சிம்கார்டு வழங்கியதால், வாடிக்கையாளருக்குஏற்பட்ட, 7.5 லட்சம் ரூபாய் இழப்பை, அபராதத்துடன் அவரிடம் செலுத்தும் படி, வாடிக்கையாளர் குறைதீர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த, கோயல், 2001ம் ஆண்டு முதல், ஏர்செல் சிம் கார்டை பயன்படுத்தி வந்துள்ளார். 23 பிப்., 2016ல்,அவரது சிம் கார்டு வேலை செய்யாததால், அவரால் மொபைல் போனை பயனப்டுத்தமுடியவில்லை.
மேலும் அந்த எண்ணை, தன் வங்கி கணக்குடன் இணைந்திருந்ததால், மறு நாளே, சிம் கார்டு வேலை செய்யாதது குறித்து, ஏர்செல் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்தார். அவரது அடையாள ஆவணங்களை சமர்ப்பித்து, புதிய சிம் கார்டு பெற்றார்.
அதன் பின், தன் வங்கி கணக்கை சரிபார்த்தபோது, அதிலிருந்து, 7.5 லட்சம் ரூபாய் முறைகேடாக திருடப்பட்டது தெரிய வந்தது. இதனால் மீண்டும் அதிர்ச்சி அடைந்த அவர், வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.
அப்போது, அவரின் பெயரிலான மொபைல் எண்ணிலிருந்து ஓ.டி.பி.,யை பயன்படுத்தியே, அவரது வங்கிக் கணக்கில் இருந்து, பணம் டிரான்ஸ்பர் செய்யப்பட்டது தெரிய வந்தது.
தன் சிம் கார்டு வேலை செய்யாத நேரத்தில், எப்படி ஓ.டி.பி., பயன்படுத்தியிருக்க முடியும் என சந்தேகம் எழுந்தது. இது குறித்து, ஏர்செல் நிறுவனத்திடம் புகார் அளித்தார். போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.
போலி ஆவணங்கள் சமர்ப்பித்து, மர்ம நபர் ஒருவர், கோயலின் சிம் கார்டுக்கு பதில், டூப்ளிகேட் சிம்கார் பெற்றுச் சென்றதும், அதை பயன்படுத்தி, நுாதன திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த வழக்கை விசாரித்த, வட சென்னை வாடிக்கையாளர் குறைதீர் தீர்ப்பாயம், கோயல் இழந்த, 7.5 லட்சம் மற்றும் அவரது மன உளைச்சலுக்கு ஒரு லட்சம் என, 8.5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் படி, ஏர்செல் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
ஆவணங்களை சரி பார்க்காமல், டூப்ளிகேட் சிம் கார்டு வழங்கிய ஏர்செல் நிறுவனத்திற்கு, தீர்ப்பாயம் கடும் கண்டனம் தெரிவித்தது.