பொங்கல் பண்டிகை கடந்த செவ்வாய்க் கிழமை கொண்டாடப்பட்டது. நேற்று காணும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காணும் பொங்கலையொட்டி மக்கள் சுற்றுலா தலங்களுக்கும், பொழுதுபோக்கு மையங்களுக்கும் சென்று மகிழ்ச்சியுடன் பொழுதை கழிப்பது வழக்கம். அதன்படி நேற்று கடற்கரை, பூங்கா போன்ற இடங்களுக்கு சென்று மக்கள் காணும் பொங்கலை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடினார்கள்.
சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரைகள், கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா, பொருட்காட்சி ஆகிய இடங்களுக்கு நேற்று காலை முதலே குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து குவிய தொடங்கினார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து கார், வேன், பஸ், மாட்டுவண்டி, மோட்டார் சைக்கிள்களில் படையெடுத்து வந்தனர்.
இதனால் அந்த இடங்களில் கொண்டாட்டம் களை கட்டியது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அதை போக்குவரத்து போலீசார் சரிசெய்தனர்.
சுற்றுலாதலங்களில் 5 லட்சம் பேர் திரண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மெரினா கடற்கரைக்கு மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வந்திருந்ததாக அவர்கள் கூறினார்கள்.