வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்சம் பணம் இருப்பு வைக்க வேண்டும். இல்லை என்றால் வங்கிகள் அபராதம் வசூலிக்கும் செய்தியை கேட்டிருக்கிறோம். ஆனால், அதேபோல், அந்த வங்கிகளின் ஏடிஎம்களில் போதிய பணம் இல்லை என்றால் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறதா? என்ற கேள்வி எழும் ஆனால், யாரும் கேட்பதில்லை. ஆச்சரியப்படத்தக்க வகையில் அந்த கேள்விக்கும் தற்போது விடை கிடைத்துள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஒருவர் பிரபல பொதுத்துறை வங்கி ஒன்றின் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளார். பின்னர், ‘வங்கி சேமிப்பு கணக்கில்போதிய இருப்பு இல்லை என்றால் வாடிக்கையாளரிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், வங்கியின் ஏடிஎம்மில் பணம் இல்லை என்றால் யார் பொறுப்பு?’ என்று ஆவேசம் அடைந்து இது தொடர்பாக நுகர்வோர் குறை தீர்ப்பு மையத்தில் புகார் செய்தார். அந்த புகாரை விசாரித்த குறை தீர்ப்பாயம், வங்கியின் குறைபாடான சேவைக்கு ரூ.2,500 அபராதம் விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வங்கி நிர்வாகம், ஏடிஎம்மில் பணம் இல்லாததற்கு இண்டர்நெட் சேவை இல்லாததே காரணம் என்பதால் அதற்கு தாங்கள் பொறுப்பு இல்லை என்று வாதிட்டது.
மேலும் புகார் தெரிவித்தவர் வங்கியின் வாடிக்கையாளர் இல்லை என்றும் கூறியது. ஆனால், இந்த வாதத்தை ஏற்கவில்லை. மூன்று வெவ்வேறு தினங்களில் ஏடிஎம்மில் பணம் இல்லை என்று தெரியவந்துள்ளது. இதற்கு யார் பொறுப்பு என்று கேள்வி எழுப்பிய தீர்ப்பாயம், வங்கியின் வாதத்தை நிராகரித்தது. இந்த பொதுத்துறை வங்கியில் வாடிக்கையாளர் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் 1,000 முதல் ரூ.3,000 வரை இருப்பு வைத்திருக்க வேண்டும். வங்கி இருக்கும் இடம், எந்த மாதிரி கணக்கு என்பது போன்ற விவரங்களின் அடிப்படையில் குறைந்தபட்ச பணம் இருப்பு வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் அபராதம் வசூலிக்கப்படும். அதற்கு 5 முதல் 15 சதவீதம் வரையில் ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படுகிறது.