Type Here to Get Search Results !

20 நிமிடங்கள் முன்னதாகவே சென்றால்தான் அனுமதி!’ - பாதுகாப்பு வளையத்துக்குள் வரும் ரயில் நிலையங்கள்


விமான நிலையங்களில் இருப்பது போல் ரயில் நிலையங்களையும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை ரயில்வேத் துறை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் போன்ற நடவடிக்கைகளை ரயில் நிலையங்களில் மேற்கொள்ள ரயில்வேத் துறை திட்டமிட்டிருக்கிறது. இதனால், பயணிகள் தங்கள் பயணம் செய்யும் ரயில் புறப்படுவதற்கு 15 முதல் 20 நிமிடங்கள் முன்னதாக வந்து பாதுகாப்பு சோதனைகளை முடித்துக் கொள்ள வேண்டும். கும்பமேளா நடைபெறும் பிரக்யராஜ் (அலகாபாத்) மற்றும் கர்நாடகாவின் ஹூப்ளி ஆகிய ரயில் நிலையங்களில் உயர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கூடிய இந்த பாதுகாப்பு நடைமுறை ஏற்கெனவே அமலில் இருக்கிறது. இந்த திட்டத்தை நாட்டிலுள்ள மேலும் 202 ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்த ரயில்வேத் துறை தயாராகி வருகிறது.


இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படை டைரக்டர் ஜெனரல் அருண்குமார், ``ரயில் நிலையங்களை முழுமையாகப் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவருவதே முதன்மையான நோக்கம். ரயில் நிலையங்களை அணுகுவதற்காக இருக்கும் பாதைகள் அனைத்தையும் கண்டறிந்து, தேவையில்லாத பாதைகளை மூடத் திட்டமிட்டிருக்கிறோம். அதேபோல், ரயில் நிலையங்களின் நுழைவு வாயில்களில் பாதுகாப்பைப் பலப்படுத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.


ரயில் நிலையங்களின் ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் திடீர் சோதனைகள் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். விமான நிலையங்களில் இருப்பதுபோல் பயண நேரத்துக்கு பல மணி நேரம் முன்னதாகப் பயணிகள் வரத் தேவையில்லை. ரயில் புறப்படுவதற்கு 15 அல்லது 20 நிமிடங்கள் முன்னதாக வந்து, பயணிகள் பாதுகாப்பு சோதனைகளை முடித்துக் கொள்ளலாம். பாதுகாப்பு நடைமுறைகள் தொழில்நுட்ப உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும். இதனால், கூடுதலாக ஆர்.பி.எஃப் வீரர்களைப் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது.


நாடு முழுவதும் 202 ரயில் நிலையங்களில் ரூ.385.06 கோடி மதிப்பீட்டில் ஐ.எஸ்.எஸ் (Integrated Security System) என்றழைக்கப்படும் பாதுகாப்பு பலப்படுத்தும் திட்டத்துக்கு கடந்த 2016ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.


சிசிடிவி கேமராக்கள், பயணிகள் மற்றும் உடமைகள் சோதனைக் கருவிகள், வெடிகுண்டைக் கண்டறியும் கருவிகள் உள்ளிட்டவைகள் மூலம் ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்த இருக்கிறோம். அதேபோல் குற்ற செயல்களில் ஏற்கெனவே ஈடுபட்டவர்களைக் கண்டறியும் வகையில் அவர்களின் முகத்தை வைத்து அடையாளம் காட்டும் பேசியல் ரெகாக்னிசன் தொழில்நுட்பமும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது’ என்றார்.

Top Post Ad

Below Post Ad