Type Here to Get Search Results !

Online மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவரா நீங்கள்? - சைபர் பிரிவு போலீஸார் எச்சரிக்கை



 ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களை நவீன முறையில் ஏமாற்றும் ஹேக்கர்கள் குறித்து பொதுமக்களுக்கு மத்திய குற்றப்பிரிவின் சைபர் பிரிவு போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபகாலமாக வங்கி சேவை, பணப் பரிவர்த்தனை, ஆனலைன் பேங்கிங், ஏடிஎம் சேவை போன்றவை வளர்ச்சி அடைந்து அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்கிறது. அதில் முக்கிய வளர்ச்சி செயலிகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் முறை. இதில் கூகுள் பே (google pay), பேடிஎம்(paytm) மொபிக்விக் (mobikwik) ஈ வாலட்(E-wallet) போன்றவை முக்கிய அங்கம் வகிக்கின்றன.

இவற்றைக் கையாளுபவர்கள் பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்காக தங்களை வாடிக்கையாளர் சேவைப் பிரிவு போன்று ஏமாற்றி பணத்தைக் கொள்ளையடிப்பதால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து மத்திய குற்றப்பிரிவின் சைபர் பிரிவுக்கும் புகார் அளிக்கின்றனர்.



இந்நிலையில் வாடிக்கையாளர் எவ்வாறு கவனமாக இருக்கவேண்டும் என சைபர் பிரிவு போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவின் சைபர் பிரிவு போலீஸாரின் எச்சரிக்கை:

“பொதுமக்கள் தற்சமயம் பணப் பரிவர்த்தனைக்காக ஆன்லைன் மூலம் வங்கிக் கணக்குகள் மட்டுமல்லாமல் பல்வேறு மொபைல் அப்ளிகேஷன்களையும் (பேடிஎம்(paytm) மொபிக்விக் (mobikwik) ஈ வாலட்(E-wallet) போன்றவை) பயன்படுத்தி வருகிறார்கள்.

இத்தகைய மொபைல் அப்ளிகேஷன்களை பயன்படுத்தும் போது அதில் ஏற்படும் சில பிரச்சினைகளுக்காக கஸ்டமர் கேர் தொலைபேசி எண்ணை கூகுள் போன்ற சர்ச் என்ஜின்களிலும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் தேடுகிறார்கள். மேற்படி இணையதளங்களில்  பல்வேறு மோசடி நபர்கள், தங்களை மேற்படி ஈ வாலட்களின் கஸ்டமர் கேர் நம்பர் என்று தங்களது கைபேசி எண்களைப் பதிவு செய்து வைத்துள்ளனர்.



கஸ்டமர் கேர் எண்ணுக்கு பொதுமக்கள்  தொடர்பு கொள்ளும் போது ஒரு இணைப்பை (link) அனுப்பி வைத்து அதில் வங்கிக் கணக்கு/ கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு விவரங்கள் (பெயர், கார்டு, நம்பர், வேலிடிட்டி தேதி, CVV நம்பர்) பதிவு செய்யும் படி கூறி மேற்படி விவரங்களைப் பதிவு செய்யச் சொல்கிறார்கள். அதை நம்பி பதிவு செய்யும் பொதுமக்களின் விவரங்கள் கிடைத்தவுடன் அடுத்த நொடி அவர்களது வங்கிக் கணக்குகளிலிருந்து ஆன்லைன் மூலமாக பணத்தை எடுத்து விடுகிறார்கள்.



கஸ்டமர் கேருக்குத்தானே நமது விவரங்களை அளித்தோம் என எண்ணும் பொதுமக்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி இவ்வாறு பணம் களவாடப்படுகிறது. எனவே பொதுமக்கள் மேற்படி பிரச்சினைகளுக்கு அந்தந்த ஈ வாலட்களின் உண்மையான வெப்சைட்டுகளுக்கு சென்று அதிலுள்ள கஸ்டமர் கேர் நம்பரைத் தொடர்பு கொண்டு தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுமென்று அறிவுறுத்தப்படுகிறது.

எனவே போலியான நபர்களிடம் தொடர்பு கொண்டு ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கை செய்யப்படுகிறது.”

இவ்வாறு சைபர் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Top Post Ad

Below Post Ad