பணம் செலவு செய்யாமல் ஆற்று மணலின் தரத்தை களத்திலேயே ஆய்வு செய்வது எப்படி? என்று பொதுப்பணித் துறையின் அதி காரப்பூர்வ தொழில்நுட்பக் கையேட் டில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
கோவை அருகே சோமனூரில் ஓராண்டுக்கு முன்பு பேருந்து நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். அண்மையில் சென்னை அருகே செம்பாக்கத்தில் அங்கன்வாடி இல்ல கட்டிடம் இடிந்து விழுந்தது. அன்றைய தினம் விடுமுறை என்பதால் அசம்பாவிதம் தவிர்க்கப் பட்டது. இக்கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு குறுகிய காலத்தி லேயே விழுந்திருப்பதாகக் கூறப் படுகிறது. இதனிடையே, “சோமனூர் பேருந்து நிலைய விபத்து குறித்து ஆய்வு நடத்துவதுடன், கட்டு மானம் குறித்தும் அதில் பயன்படுத் தப்படும் பொருட்களின் தரம் பற்றியும் அரசு மற்றும் தனியார் கட்டுநர்கள் மட்டுமின்றி பொது மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் விரிவான தொழில்நுட்பக் கையேடு ஒன்றை தயாரித்து வெளியிட வேண்டும்” என்று பொதுப்பணித் துறைக்கு அரசு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டார்.
அதையடுத்து, பொதுப்பணித் துறை (கட்டிடம்) தலைமைப் பொறி யாளர் எஸ்.மனோகர், துணைத் தலைமைப் பொறியாளர் கே.பி.சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் சி.கல்யாணசுந்தரம் ஆகியோர் கொண்ட குழு, கட்டிட கட்டு மானம் தொடர்பான விரிவான தொழில்நுட்பக் கையேட்டை உருவாக்கி வெளியிட்டது.
12-க் கும் மேற்பட்ட அரசுத் துறைகள் மட்டுமின்றி தனியாரும் இதனைப் பயன்படுத்துகின்றனர். இந்த அதிகாரப்பூர்வ தொழில் நுட்பக் கையேட்டில், பணம் செலவு செய்யாமல் ஆற்று மணலின் தரத்தை எளிய முறையில் பொது மக்களே சோதித்து தெரிந்து கொள் ளலாம் என்று புகைப்படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.
அதில் கூறி யிருப்பதாவது: ஆற்று மணல் என்பது 4.75 மில்லி மீட்டருக்கு குறைவான துகள்கள் கொண்டதாக இருக்க வேண்டும். எந்த ரசாயனத்துடனும் ஆற்றுமணல் வேதிவினை புரியக் கூடாது. வேறு எந்தப் பொருளையும் ஆற்று மணலோடு கலக்கும்போது வேதிவினை புரிந்து மற்றொரு பொருள் உருவாகக்கூடாது. அந்தப் பொருளோடு ஒட்டலாம். சிமென்ட்டில் கலக்கும்போது ஒட் டிக் கொள்வது போல ஒட்டலாம். ஆற்றுமணல் சுத்தமாகவும் பருமனாகவும் இருத்தல் அவசியம். அவல் போல தட்டையாக இல்லாமல், ரவை போல பரும னாக இருக்க வேண்டும். இந்திய தர கட்டுப்பாட்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ளபடி பல்வேறு அள வுள்ள துகள்கள் ஆற்று மணலில் இருக்க வேண்டும். ஆற்றுமணலில் இலை தழை, சாணம் போன்ற கரிம அசுத்தங்கள் (Organic Impurities) இருக்கக்கூடாது. உப்புத்தன்மை, வண்டல் மண் மற்றும் களிமண் கலந்திருக்கக்கூடாது. இவையே ஆற்றுமணலில் தன்மைகள் ஆகும். களத்திலேயே ஆற்று மணலை எளிதாக பரிசோதனை செய்யலாம். ஆற்றுமணலை நாக்கில் வைத்து சுவை மூலமாக தெரிந்து கொள்ள முடியும். உப்புத்தன்மை இருந் தால் அது கடற்கரை மணலாக இருக்கும். ஒருபடி மணல் எடுத்து உள்ளங்கைகளில் வைத்து தேய்த் தால், கை கருப்பு நிறமாக மாறி னால், அதில் களிமண் இருக் கிறது என்று அர்த்தம். கருப்பாக மாறாவிட்டால் அது ஆற்று மணல்தான். சிறிய சோதனைக் குழாய் மூலமாகவும் ஆற்று மணலின் தரத்தை அறியலாம். குறிப்பிட்ட அளவு ஆற்று மணலை கண் ணாடிக் குடுவையில் போட்டு அதில் சமையல் உப்பை கலந்து, 20 நிமிடம் வைத்திருந்தால் களி மண் மட்டும் மேலே மிதக்கும். களிமண் 8 சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது. அதாவது 100 மில்லி தண்ணீரில் 8 மில்லி அள வுக்குள் களிமண் இருக்க வேண் டும். அதற்கு மேல் இருந்தால் அந்த மணல் பயன்பாட்டுக்கு உகந்தது அல்ல. அந்த மணலை தண்ணீரில் நன்கு கழுவிய பிறகே பயன்படுத்த வேண்டும். கரிம அசுத்தங்கள் இருப்பதைக் கண்டறிய, கண்ணாடிக் குடுவை யில் 100 மில்லி கிராம் மணல் எடுத்து, அதில் 10 மில்லி கிராம் சலவை சோடாவை நன்கு கலக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது, வண்ணம் மாறா விட்டால் அது ஆற்று மணல். வைக் கோல் வண்ணத்தில் மாறினால் அதுகூட பயன்பாட்டுக்கு உகந்தது தான். ஆனால், அடர் பழுப்பு வண்ணமாக மாறினால் அதைப் பயன்படுத்தக்கூடாது. கரிம அசுத் தங்கள் அதிகமாக இருக்கும் அந்த மணலை வீணாக்காமல், மிக வும் நன்றாகக் கழுவி, மீண்டும் பரிசோதனை செய்து பயன்படுத்த லாம். நம் நாட்டு ஆற்று மணல் மட்டுமல்லாமல், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆற்று மணலையும் மேற்கண்ட முறைகளில் எளிதாக சோதித்துப் பார்க்க முடியும். இவ்வாறு அந்த தொழில்நுட்பக் கையேட்டில் கூறப்பட்டுள்ளது. ஆய்வுக் கூடங்களில் மேற்கொள் ளப்படும் ஆற்று மணல் பரி சோதனை குறித்து பொதுப்பணித் துறை அதிகாரி கூறுகையில், “ஆற்று மணலில் கடற்கரை மணல் கலப்படம் செய்யப்படலாம். சுத்தம் இல்லாத இடத்தில் இருந்து ஆற்று மணல் அள்ளும்போது, அதில் களிமண், வண்டல் மண், கரிம அசுத்தம் ஆகியன கலந்திருக்கும். இவற்றை சோதித்த பிறகு பயன்படுத்துவதே சிறந்தது. சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி, தரமணியில் உள்ள பொதுப் பணித்துறை அலுவலகம், தேசிய பரிசோதனைக் கழகம், பெருங்குடி யில் ஐஐடி அங்கீகாரத்துடன் செயல்படும் ‘ஐகோமெட்’ என்ற தனியார் நிறுவனம் ஆகிய இடங் களில் ஆற்று மணல் பரிசோதனை செய்யப்படுகிறது. இங்கு ஆற்று மணலில் உள்ள கரிம அசுத்தம், வண்டல் மற்றும் களிமண், உப்புத்தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்வதற்கு சுமார் ரூ.1,500 வரை வசூலிக்கப்படுகிறது. கட்டிட ஸ்திரத்தன்மைக்கு ஆற்று மணலை ஆய்வு செய்து பயன் படுத்துவது அவசியம்” என்றார்.
Source தி இந்து