வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘பெதாய்’ புயலாக மாறி வட தமிழக கடலோரப் பகுதியை இன்று கடந்து செல்கிறது. மேலும் இது ஆந்திர கடலோரத்தில் நாளை கரையை கடக்க உள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய துணைஇயக்குநர் ஜெனரல் எஸ்.பாலசந்திரன் நேற்று செய்தியாளர்க ளிடம் கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடல்பகுதியில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், தற்போது சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 690 கிமீ தொலைவில் நிலவி வருகிறது.
இது கடந்த 24 மணி நேரத்தில் 264 கிமீ தொலைவை கடந்துள்ளது. இதன் வேகம் தற்போது மணிக்கு 11 கிமீ ஆகஉள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது புயலாக வலுப்பெற்று ஆந்திர மாநிலம் ஓங்கோல் மற்றும் காக்கிநாடா இடையே, 17-ம் தேதி பிற்பகல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகம் கடலோரப் பகுதி அருகே சுமார் 200 கிமீதொலைவில் கடந்து செல்லும் போது, வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் சிலஇடங்களில் நாளை மழைபெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அவ்வப்போது மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் தரைக் காற்று வீசக்கூடும்.
தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 16, 17 ஆகியதேதிகளில் மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படு கிறார்கள். இவ்வாறு எஸ்.பாலசந்திரன் கூறினார். இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆந்திரா நோக்கி செல்லும்போது தமிழககடலோரப் பகுதிகள் கொந்தளிப்பாகவும், அதன் அலைகள் அதிகஉயரத்தில் எழும்ப வாய்ப்பிருப்பதாகவும், இந்திய வானிலைஆய்வு மையம் மற்றும் இன்காய்ஸ் நிறுவன கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 4.6 மீட்டர் முதல் 10.9 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் எழும்பக்கூடும். அதிகபட்சமாக சென்னை கடலோரப் பகுதியில் 10.9 மீட்டர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கடலோரப் பகுதிகளில் 10.5 மீட்டர் உயரம் வரையிலும் கடல் அலைகள் எழும்ப வாய்ப்புள்ளது. இவ்வாறு கூட்டறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.
Source தி இந்து