Type Here to Get Search Results !

ஆன்-லைன் மருந்து விற்பனை மீதான தனி நீதிபதி தடை நிறுத்திவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு 



ஆன்-லைன் மருந்து விற்பனைக்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதுகுறித்து தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “ஆன்-லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்களுக்கு காலாவதியான, போலியான மற்றும் தவறான மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே, ஆன்-லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தது. நீதிபதி புஷ்பா சத்யநாராயணா இவ்வழக்கை விசாரித்து, “ஆன்-லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்தும் விதிகளை ஜனவரி 31-க்குள் அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கும், அதற்கடுத்த இரண்டு மாதத்தில் ஆன்-லைன் மருந்து விற்பனைக்கு விண்ணப்பித்து, ஆன்-லைன் மருந்து விற்பனை நிறுவனங்கள் உரிய அனுமதி பெற வேண்டும். 

அதுவரை ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது” என்று கடந்த 17-ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஆன்-லைன் மருந்து விற்பனையாளர்களான ப்ராக்டோ, 91 ஸ்டிரீட்ஸ், மெட்லைப், 1எம்.ஜி., நெட்மெட்ஸ் ஆகிய நிறு வனங்கள் மேல்முறையிடு செய்தன. அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 


இடைக்கால கோரிக்கை யாக அந்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது. நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் கொண்ட அமர்வு இவ்வழக்கை நேற்று விசாரித்தது. அப்போது ஆன்-லைன் மருந்து நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “தனி நீதிபதியின் உத்தரவால் ஆன்-லைன் மருந்து நிறுவனங்களின் வியாபாரம் பெரிதும் பாதித்துள்ளது. மேலும், இணைய தளங்களை மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆன்-லைன் மருந்து விற்பனையை ஒழுங்குபடுத்த மத்திய அரசு விதிகளை வகுக்க உள்ளதால் தனி நீதிபதி உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும்” என்று வாதிட்டனர். 

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடும்போது, “ஆன்-லைன் மருந்து விற்பனையை ஒழுங்கு படுத்த புதிய விதிகள் உருவாக்கப் படுகின்றன. அந்த வரைவு விதிகளை மீறும் இணையதளங்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படும். வரைவு விதிகள் ஜனவரி இறுதிக்குள் வகுக்கப்பட்டு விடும்” என்று தெரிவித்தார். இது தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரிய இடைக்கால மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். மேலும், இடைக்கால மனு மீதான தீர்ப்பு வரும்வரை ஆன்-லைன் மருந்து விற்பனைக்கு தனி நீதிபதி பிறப்பித்த தடையை நிறுத்திவைத்தும் உத்தரவிட்டனர்.

Top Post Ad

Below Post Ad