Type Here to Get Search Results !

எச்ஐவி தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். 24 வயதான அந்த பெண் 2-வது முறையாக கர்ப்பமானார். அந்த பெண்ணுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். கடந்த 3-ந்தேதி அந்த கர்ப்பிணிக்கு ரத்தம் செலுத்தப்பட்டது.


ஏற்கனவே சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த சாத்தூர் வாலிபர், அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினர் பெண்ணுக்கு ரத்தம் தேவைப்பட்டதால் ரத்ததானம் செய்துள்ளார். பின்னர் அவர், வெளிநாடு செல்வதற்காக மதுரைக்கு வந்து மீண்டும் ரத்த பரிசோதனை செய்தபோது, அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.


எனவே தனது ரத்தத்தை உறவினர் பெண்ணுக்கு செலுத்த வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். அவர் கொடுத்த எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் அவருடைய உறவினர் பெண்ணுக்கு ஏற்றப்படவில்லை என்று தெரிவித்த ஆஸ்பத்திரி ஊழியர்கள், அந்த ரத்தம் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.


இதுகுறித்து சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே ஆட்டோ டிரைவரின் கர்ப்பிணி மனைவிக்கு அந்த ரத்தம் ஏற்றப்பட்டுவிட்டதால் அவருக்கு ரத்த பரிசோதனை செய்தபோது, ரத்தத்தில் எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியவந்தது.


இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, சாத்தூர் வாலிபர் ரத்ததானம் செய்வதற்கு முன்பு அவரது ரத்தம் பரிசோதனை செய்யப்படவில்லை என தெரியவந்தது. இதையடுத்து ரத்த வங்கி ஊழியர்கள் 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.


இந்த நிலையில், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மனோகரன் வெளியிட்ட உத்தரவில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 14 ரத்த வங்கிகளில் மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டுள்ள ரத்தத்தை மறுபரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார். எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணிக்கு வீட்டில் வைத்தே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


எச்.ஐ.வி. தொற்று ரத்தம் செலுத்தப்பட்டு பாதிப்புக்குள்ளான பெண்ணுக்கு அரசு வேலை வழங்க சுகாதாரத்துறை முடிவு செய்து உள்ளது. அரசு வேலை வழங்குவது குறித்து விருதுநகர் மாவட்ட நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு உள்ளது. கர்ப்பிணியின் கணவருக்கு அரசு சார்ப்பில் ஓட்டுநர் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணும், அவரது கணவரும், சாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


விருந்துநகர் சென்ற சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பாதிக்கபட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினார். சுகாதாரத்துறை செயலரிடம் தனது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கர்ப்பிணி பெண் அளித்தார்.


கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கும் என மாநில மனித உரிமைகள் ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் நெல்லையில் பேட்டி அளித்து உள்ளார். மருத்துவ பிரதிநிதிகளிடம் அறிக்கை பெற்று, விசாரித்து உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் கூறி உள்ளார்.

Top Post Ad

Below Post Ad