வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்து டிசம்பர் 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆந்திர மாநிலம் நரசபூர் அருகே கரை கடக்க வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கணித்துள்ளார். புயல் ஆந்திரா நோக்கிச் செல்வதால் சென்னை உட்பட தமிழகத்துக்கு எதிர்பார்த்த மழை கிடைக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.
*இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
தெற்கு மத்திய வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி பின்னர் நாளை புயலாக மாறும். இந்த புயலுக்கு ‘பேய்ட்டி’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயல் வட தமிழகம் அல்லது தெற்கு ஆந்திராவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அவ்வாறு நடந்தால் வட தமிழகத்தில் குறிப்பாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் அந்த புயல் திசைமாறி வடக்கு நோக்கி நகர்கிறது.
இமயமலை பகுதியில் பெய்யும் பனி காரணமாகவும், மியான்மரில் இருந்து இழுக்கும் குளிர்ந்த காற்று காரணமாகவும் புயலின் போக்கு மாற வாய்ப்புள்ளது. மசூலிபட்டினம் - காக்கிநாடா இடையே நர்சபூர் அருகே டிசம்பர் 16-ம் தேதி கரையை கடக்கும்.
கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்கள் வழியாக வலுவிழந்த நிலையில் கரையை கடக்கும். எனவே இதனால் பாதிப்பு இருக்காது. புயல் கரையை கடக்கும் முன்பாக கடலை சீற்றமாக வைத்திருக்கும்.
தமிழக கடல்பகுதிக்கு எந்த பாதிப்பும் இல்லை. தமிழகத்துக்கு மழை இருக்காது. அதேசமயம் பயனளிக்கும் மழையும் இல்லாமல் போகும். சென்னை சுற்று வட்டார பகுதிகளில் லேசான மழை இருக்கலாம். கனமழை இருக்காது. திருவள்ளூர், சென்னை மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.