தென் தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயல் அதிக பாதிப்பை ஏற்படுத்தினாலும் தமிழகத்துக்கு தேவையான மழையைக் கொடுக்கவில்லை. ஆனால் அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தாலும் நீர் நிலைகள் நிரம்பும் அளவுக்கான மழை பெய்யவில்லை. இந்நிலையில் புதுச்சேரி வங்கக்கடலில் பெய்ட்டி புயல் உருவானது. இந்த மழை வட தமிழகத்தில் கடுமையான மழையைக் கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தனது பாதையில் மாற்றம் ஏற்பட்டு ஆந்திரா பக்கம் சென்றது பெய்ட்டி. இந்தப் புயலால் சென்னையில் கடுமையான குளிர்காற்று மட்டுமே வீசியது. தற்போது தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் வறண்டு வரும் நேரத்தில் மழை என்பது தேவையாக உள்ளது. இந்நிலையில் குமரிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் தென் தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டதுடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் அவ்வப்போது மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.மேலும் மீனவர்களுக்கு எந்தவிதமான எச்சரிக்கையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது....
.