நேபாள நாட்டில் புதிய 200, 500, 2,000 ரூபாய் நோட்டுக்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
2016ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி மத்திய அரசு 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை மதிப்பு நீக்கியது. அதற்குப் பதிலாக புதிய 200, 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது ஆர்பிஐ அறிமுகப்படுத்தியுள்ள 200, 500, 2000 ரூபாய் நோட்டுக்கள் நேபாளத்தில் செல்லாது என்று செய்திகள் வந்துள்ளன. நேபாள நாட்டைப் பொறுத்தவரையில் அங்கேயும் நாணய முறை தான் உள்ளது. இந்தியாவில் ரூபாய் நோட்டுக்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடுவது போல், நேபாளத்தில் நேபாள ராஷ்டிரிய வங்கி வெளியிட்டு வருகிறது. இருப்பினும் இந்திய ரூபாய் நோட்டுக்களும் அங்கு செல்லுபடியாகும்.
இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 200, 500 மற்றும் 2,000 ரூபாயை தடை செய்வது குறித்து நேபாள் நாடாளுமன்றத்தில் நேற்று ஆலோசிக்கப்பட்டது. இது குறித்து நேபாள தொழில்நுட்ப மற்றும் தகவல்துறை அமைச்சர் கோகுல் பிரசாத் கூறுகையில், 2016ம் ஆண்டு 1000, 500 ரூபாய் நோட்டுக்களை பிரதமர் மோடி தடை செய்தார். அப்போது நேபாளத்தில் சுமார் 100 கோடிக்கும் மேற்பட்ட 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் பயன்படுத்தப்பட்டது. அதற்குப் பின் புதிய ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால், ஆர்பிஐ-யின் புதிய 200, 500 2000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்த நேபாளத்தில் சட்டபூர்வமாக்கவில்லை. எனவே, தற்போதைய சூழலில் 100 ரூபாய் நோட்டுக்கள் மட்டும் பயன்படுத்த மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. வரும் 2020ம் ஆண்டு விஸிட் நேபாள் (Visit Nepal Year) என்ற பெயரில் நேபாள திருவிழா நடத்தபடுகிறது. இதனை முன்னிட்டே இந்த ரூபாய் நோட்டு தடை முடிவு எடுக்கப்பட்டுள்ளது’
இவ்வாறு அவர் தெரிவித்தார்.