இந்தியாவில் ‘புல்லட்’ ரயிலுக்கு முன் மாதிரியாக கருதப்படும் இன்ஜின் இல்லாத ‘ட்ரெயின் 18’ ரயில் 180 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டத்தின்போது, பயணம் செய்து இன்று சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் அதிவேக ரயில்கள் உருவாக்கும் முயற்சியின் ஒருபகுதியாக சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிவே ரக ரயில் உருவாக்கப்பட்டுள்ளது.
‘ட்ரெயின் 18’ என பெயரிப்பட்டுள்ள இந்த ரயிலுக்கு தனியாக இன்ஜின் இல்லை. இழுவை வேகத்திறன் கொண்ட பெட்டிகளாக தயாரிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள அதிவேக ரயிலான சதாப்தி ரயிலை விடவும், இந்த ரயிலின் பயண நேரம், 15 சதவிகிதம் குறைவாக இருக்கும்.
சுமார் 100 கோடி ரூபாய் செலவில் சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் இந்த ரயில் தயாரிக்கப்பட்டது.
‘வைபை’ வசதி, ஜிபிஎஸ் தகவல், ‘டச் பிரீ’ பயோ டாய்லெட், எல்இடி லைட்டுகள், பயணத்தின்போது ஏசியின் அளவை கூட்டி, குறைத்துக்கொள்ளும் வசதி என பல நாடுகளில் உள்ளது போன்ற வசதிகள் இந்த ரயிலில் செய்யப்பட்டுள்ளன.
இந்த ரயிலின் முதல் ஓட்டம் கோட்டா - சவாய் மாதோபூர் இடையே இன்று இயக்கப்பட்டது. அப்போது 180 கிலோ மீட்டர் தொலைவு வேகத்தில் அதிவேகமாக இந்த ரயில் பயணம் செய்தது.
எதிர்பார்க்கப்பட்டது போலவே ஆட்டம் இன்றி அதிவேகமாக ரயில் பயணம் செய்ததை அதிகாரிகள் உறுதி செய்தனர். முதல் பயணம் வெற்றிகரமாக அமைந்ததை தொடர்ந்து விரைவில் அதிகாரிகள் சான்றிதழ் வழங்குவார்கள் எனத் தெரிகிறது.
விரைவில் இந்த ரயில் சோதனை ஓட்டம் முடிந்து முக்கிய நகரங்களுக்கு இடையே சதாப்தி ரயில் போன்று இயக்கப்பட உள்ளது.